கூலிம், அக்டோபர்.03-
பெற்றோர்களின் சில அலட்சியப் போக்கினால் அடையாள அட்டைகள் இன்றி ஏறக்குறைய 5 வருடங்களுக்கு மேல் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்தித்து வாழ்ந்த தங்களுக்கு சமூகச் சேவையாளர் கோபாலகிருஷ்ணன் என்ற கல்சிவா அவரின் உதவியாலும் உள்துறை அமைச்சின் ஒத்துழைப்பாலும் இப்பொழுது அடையாள அட்டையுடன் நிம்மதியான வாழ்க்கையுடனும் எவ்விதமான இடையூறுகள் இல்லாமலும் கல்வியைத் தொடர்வதாக கூலிம் பாயா பெசார் வட்டாரத்தைச் சேர்ந்த ஷேஸ்தரா த/பெ முனியான்டி ( வயது 17 )மற்றும் ரேஸ்வின் த/பெ முனியான்டி( வயது 19) தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அடையாள அட்டையைப் பெறப் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களை வளர்த்த பாட்டி போராடினார். பேரப்பிள்ளைகள் கல்வி கற்பதற்காக இந்த அடையாள அட்டை இல்லாதது மிகப் பெரிய இடையூறாக இருப்பதை உணர்ந்து முன்பு பாடாங் செராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த மு.கருப்பையாவைச் சந்தித்தாக ஷேஸ்தரா முனியாண்டி தெரிவித்தார். இப்பிரச்சனை சார்ந்து மு. கருப்பையாவும் கூலிம் மாவட்ட பதிவு இலாகாவை நாடிய பொழுது இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்தால் மட்டுமே அடையாள அட்டை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இப்பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பில் இல்லாமல் ஒரு வளர்ப்பு பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு அவர்களால் பல துன்பங்களை அனுபவித்ததால் அவ்வளர்ப்புப் பெற்றோர்களின் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு அப்பெற்றோர்களைக் காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவித்தார். இச்சூழ்நிலை இருந்ததால் பதிவு இலாகா வளர்ப்புப் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட சமயத்தில் அவர்கள் இப்பிள்ளைகளுக்கு அடையாள அட்டை எடுப்பதற்கு கையொப்பம் இட முடியாது என்று தெளிவாகத் தெரிவித்ததாக ஷேஸ்திரா கூறினார். அவர்கள் அவ்வாறு கூறிய பின் மு.கருப்பையா இதன் பிறகு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் முடிந்தால் எதாவது அரசு சாரா இயக்கங்களைச் சந்தித்து உதவியைக் கேட்குமாறு கூறினார்.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் சமூகச் சேவையாளரான கோபாலகிருஷ்ணன்@கல்சிவாவை தன் பாட்டி சந்தித்து அடையாள அட்டை பிரச்சனையும் இருந்து வரும் சூழ்நிலையையும் அவரிடம் தெரிவித்தார். அச்சமயத்தில் கோபாலகிருஷ்ணன் முடிந்த வரை உதவிச் செய்வதாகக் கூறினார். அதன் பிறகு, பாடாங் செராய் காவல்நிலையத்திற்குச் சென்று அப்பிள்ளைகளின் வளர்ப்புப் பெற்றோர்களின் மீது புகார் செய்து அப்பெற்றோர்களைப் பதிவு இலாகாவிற்கு வந்து கையொப்பம் இடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்பெற்றோர்கள் இதற்கு முன்பு காவல்துறையில் பிடிபட்டதால் ஜாமீனுக்கு வெ 10 ஆயிரத்தைச் செலுத்தியதால் அப்பணத்தைத் தந்தால் பதிவு இலாகாவிற்கு வந்து கையொப்பம் வைப்பதாகக் கூறினர்.

வளர்ப்புப் பெற்றோர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் மீண்டும் இவ்விரு பிள்ளையைப் பெற்றெடுத்த பெற்றோர்களை கோபாலகிருஷ்ணன் தேடத் தொடங்கியதாக ஷேஸ்திரா கூறினார். அதன் பிறகு, சில குடும்ப உறுப்பினர்களின் உதவியால் பெற்ற தாயின் கைத்தொலைபேசி எண் கிடைத்தது. இதற்கு இடையில் சமூகச் சேவையாளர் கோபாலகிருஷ்ணன் இப்பிள்ளைகளின் அடையாள அட்டைக்காக பல முறை அலோர் ஸ்டார் மற்றும் கூலிம் மாவட்டங்களிலுள்ள பதிவு இலாகாவை நாடி கலந்துரையாடல் செய்தார்.
இறுதியாக, அப்பிள்ளைகளின் தாய் நேரடியாக கூலிம் மாவட்ட பதிவு இலாகாவிற்கு வருகை தந்து அடையாள அட்டைப் பெறுவதற்கான பாதுகாவலர் என்ற முறையில் அனைத்து பாரங்களிலும் கையொப்பம் இட்டார் என்றார் ஷேஸ்தரா.
இவ்வருடம் உள்துறை அமைச்சின் கீழ் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உள்துறை அமைச்சர் செனட்டர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன், ஷேஸ்தரா த/பெ முனியான்டி மற்றும் ரேஸ்வின் த/பெ முனியான்டி ஆகிய இருவருக்கும் அடையாள அட்டைகளை எடுத்து வழங்கினார்.

அடையாள அட்டை இல்லாமல் கல்வி கேள்விகளில் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தத் தங்களின் வாழ்க்கையில் ஒளி வைத்த சமூகச் சேவையாளர் கோபாலகிருஷ்ணன்@கல்சிவாவிற்கும் உள்துறை அமைச்சுக்கும் நன்றி என்றனர் ஷேஸ்தரா மற்றும் ரேஸ்வின்.