பகான் டாலாம், நவம்பர்.17-
அன்றாட வேலைகளில் அலுவல்கள் காரணமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஆரோக்கியத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒற்றுமை ஓட்டம் 2.0 பட்டர்வொர்த், பகான் டாலாம், பாகான் லுவார் டுவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒற்றுமை ஓட்ட நிகழ்வை பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜும்பா, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற நடவடிக்கைகள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. மலாய், சீனர், இந்தியர் என மூவின மக்களும் கலந்து கொண்டவர்களுக்கு மின் சான்றிதழும் 5 கி.மீ. ஓடி முடித்தவர்களுக்குப் பதக்கமும் வழங்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் ஒலிகோ, விகோ, சன்குயிக், 100 பிளஸ் முதலிய பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வெற்றியடையச் செய்யும் நோக்கில் பலர் முன்வந்து நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.

முதன்மை நன்கொடையாளராக ஃபதர் டோப் கோல்ட் டத்தோ டான் தியூவ திகழ்ந்ததுடன் லிம் குவான் எங் 5 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினார். வேக்கிங் நகைக்கடை மூலம் டாமோன் வோங் அதிர்ஷ்ட குலுக்கில் வெற்றி பெற்ற முதல் பத்து நபர்களுக்கு தங்கக் காசை பரிசாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான குமரன் கிருஷ்ணன் பேசுகையில் இது போன்ற நிகழ்ச்சி மக்களை இன்னும் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கச் செய்கிறது. எனவே, இனி வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்வோம் என அவர் தெரிவித்தார்.

லிம் குவான் எங் பேசுகையில், நாம் எல்லாரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது போன்ற நிகழ்ச்சி மிக அவசியமாகும். அதிலும் குறிப்பாக நாம் பாகான் தொகுதியை மேலும் சிறப்படையைச் செய்ய வேண்டும். எல்லோரும் அறிந்தது போல பாகான் தொகுதியில் பல மேம்பாட்டு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது என்றார்.









