
அரச மலேசிய போலீஸ் படையில் குற்றப் புலனாய்வுத் துறை பிரிவின் (சி.ஐ.டி) இயக்குனராக இருந்து, 6 ஆண்டுகள் அற்புதமாகச் செயலாற்றினார் ஜமான் கான். ஜமான் கான் பெயரைச் சொல்லும் போதே ஒரு கம்பீரம் போலீஸ் படையில் இருக்கும். நேருக்கு நேர் மோதக்கூடியவர். குற்றவாளிகளை வேட்டையாடுவதில் தன்னிரகற்று விளங்கியவர். நேர்மையும், கண்ணியமும், கண்டிப்பும் அவரின் சொத்தாக இருந்தது. போலீஸ் படைக்கென்று தன்னை அர்ப்பணித்து கொண்டவர் போல் அவரின் ஒவ்வொரு செயற்பாடும் இருந்தது.
போலீஸ்காரர்கள் என்பவர்கள் சட்டத்தின் சேவகர்கள். சட்டம் மற்றும் நீதிமன்றம் ஆகிய இவ்விரண்டுக்கு மட்டும்தான் போலீஸ்காரர்கள் பயப்பட வேண்டுமே தவிர தனி நபர்களுக்கு அல்ல என்பதை தமது 35 ஆண்டுக் கால போலீஸ் படையில் எப்போதும் வலியுறுத்தி வந்த துணிச்சல் நிறைந்த ஒரு போலீஸ்காரர் ஜமான் கான்.
1989ஆம் ஆண்டு போலீஸ் படையின் சி.ஐ.டி. இயக்குனராக இருந்த இவர்,1994ஆம் ஆண்டு சிறைச்சாலை தலைமை இயக்குனராக மாற்றப்பட்டார்.
சிறைச்சாலையில் கைதிகளால் பிணை பிடிக்கப்பட்ட நீதிபதியைத் தமது அதிரடி நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்தார். இந்த அதிரடி நடவடிக்கையால் ஜமான் கான் பெயர் பிரபலமானது. இவர் சி.ஐ.டி. இயக்குனராகப் பொறுப்பேற்ற காலத்தில் மோனா அப்பெண்டி தம்பதியர் கைது, பெந்தோங் காளி சுடப்பட்டது உட்பட பல கடும் குற்றவியல் வழக்குகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார்.
அஞ்சா சிங்கம் ஜமான் கானுக்கு அடுத்து 29 ஆண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு இன்னொரு ஜமான் கானாகப் பார்க்கப்படுபவர் அயோப் கான் மைதீன் பிச்சை. புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பயங்கரவாதத் துடைத்தொழிப்புப் பிரிவின் உதவித் தலைமை இயக்குனராக அயோப் பொறுப்பேற்ற போதே பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பிரபலமாகப் பேசப்பட்டார்.
2019ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர்தான் அந்தக் கைது நடவடிக்கைக்குப் பொறுப்பேற்று இருந்த அயோப் கான் என்ற ஓர் உயர் போலீஸ் அதிகாரி பரவலாகப் பேசப்பட்டார்.
அயோப் கான், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து மாற்றலாகி ஜொகூர் மாநில போலீஸ் தலைவராக 2020ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அந்தத் தென் மாநிலத்தில் அவர் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் அதிரடியாக இருந்தது.
ஜொகூர் மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர்கள், அதிகாரிகளைத் தற்காக்கும் மாவட்ட போலீஸ் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயோப் கான் விடுத்த எச்சரிக்கை சமிக்ஞை, மாநிலத்திலுள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் வரை ஆட்டம் காண செய்தது.
இவர் ஜொகூர் மாநில போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்ற மூன்று மாதக் காலக்கட்டத்திலேயே இந்தோனேசியாவிலிருந்து கள்ளக் குடியேறிகளை அழைத்து வருதல், அவர்களைத் தாயாகத்திற்குத் திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'Geng Otong' என்ற கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்தார்.
போலீஸ்காரர்கள், உயர் அதிகாரிகள், குடிநுழைவுத்துறை அதிகாரிகள், சட்டவிரோத குடியேறிகளைக் கொண்டு வரும் படகு உரிமையாளர்கள், முகவர்கள் என ஒரே நேரத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய அம்சமாக, குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் தம்முடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்தக் கும்பலுடன் இரகசிய தொடர்பு கொண்டு நீண்ட காலமாகவே இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளுக்குப் போதைப்பொருளை விநியோகித்து வந்தாக நம்பப்படும் அந்தப் போலீஸ் நிலையத்தின் நான்கு உயர் அதிகாரிகளைக் கைது செய்தது அயோப் கானின் மற்றொரு வெற்றியாகும். ஜொகூர் மாநில போலீஸ் துறைக்குத் தலைமையேற்ற 22 மாத காலத்திற்குள் அயோப் கானின் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றச் செயல் புரிபவர்களுக்கும், சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்பில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
“ நாம் என்ன சொன்னாலும் மக்கள் கேட்கப் போவதில்லை. ஆனால், நாம் என்ன செய்தாலும் மக்கள் பார்த்து கொண்டு இருப்பார்கள். நமது நடவடிக்கைகள், செயல்கள்தான் போலீஸ் படைக்கு மரியாதையை ஏற்படுத்தும்", என்பது போலீஸ்காரர்களுக்கு அயோப் கான் வலியுறுத்தும் வாசகமாகும்.
அயோப் கான் ஜொகூர் மாநிலத்திலிருந்து மறுபடியும் புக்கிட் அமானுக்குப் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டபோது, அவர் போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது. போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவுக்கு அயோப் கான் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி தலைமையேற்றபோது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குக் காலனாகத் தெரிந்தார். இவர் ஊழலை முற்றாக நிராகரிப்பவர். பண மதிப்பைவிட பணி மதிப்பை உணர்ந்தவர். போலீஸ் பணிகள் ஊழல் அரக்கனால் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றவர். இவர் தனிமனித அறநெறியில் வாழ்பவர்.
ஜொகூர் மாநிலத்திற்குத் தலைமையேற்றிருந்த போது, ஊடகவியலாளர்களின் ஒரு மாலைப் பொழுது எனும் தேநீர் நிகழ்ச்சியில் அயோப் கான் திடீரென்று 'ரொட்டி சானாய்' செய்யும் இடத்தில் ஒரு பணியாளரைப் போல தமது சட்டையின் மீது 'ஏஃப்ரோனை' மாட்டிக்கொண்டு 'ரொட்டி சானாய்' மாவைப் பிசைந்து மிக லாவகமாக விசிறினார். இந்தக் காட்சி பலரின் கவனத்தை ஈர்த்தது.
அப்போதுதான் அவரின் குடும்பப் பின்னணியை அயோப் கான் வெளியிட்டார். கெடா மாநிலத்தில் பெண்டாங், தானா மேராவைப் பூர்வீகமாகக் கொண்ட அயோப் கான், தமது தந்தை மைதீன் தேநீர் கடையில் ஓய்வு நேரத்தில் உதவிக்குச் செல்லும்போது 'ரொட்டி சானாய்' செய்ய கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான அயோப் கான், தேசிய பல்கலைக்கழத்தில் (UKM) உயர்க்கல்வி பயின்றபோது, தமது இளமை கால நினைவுகளே அவரை ஓர் ஒழுக்கச்சீலராக உருவாக்கியிருக்கிறது.
"UKM பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் பட்டப்படிப்பைத் தொடர எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். 1980களில் மிகக் குறைவான பல்கலைக்கழகங்கள் இருந்ததால், ஆறாம் படிவ (STPM) மாணவர்களுக்கு உயர்க்கல்வி பயில்வதற்குப் பொதுப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு எளிதில் கிடைக்காத காலக்கட்டம் அது.
ஆனால், எனது குடும்பம், சமூகம் மற்றும் நாடு ஆகியவற்றுக்குப் பங்களிப்பதற்கு எனக்குப் பொதுப் பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில், கணிதப்பாடம் எனக்குப் பலவீனமாக இருந்ததால் உயர்க்கல்வி படிப்பை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆயினும், எனது விரிவுரையாளர்கள் மற்றும் சகாக்களின் உறுதுணையோடு விடாமுயற்சியுடன் பயின்றேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெரியவர்களின் நல்லாசிகள் இருந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. எதையும் நான் மெதுவாகக் கற்றுக் கொள்பவன். 10 வயதில்தான் படிக்கத் தொடங்கினேன். அப்போதிருந்து, நான் ஆர்வத்துடன் படித்தேன். பலதரப்பட்ட பின்னணிகள், மதங்கள், இனங்கள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளைச் சேர்ந்த ஒரு உற்சாகமான நண்பர்களின் வலையமைப்பை UKM எனக்குத் தந்தது. சபா, சரவா மாநிலங்களில் எனது பல்கலைக்கழகத் தோழர்களுடன் மிகவும் தனித்துவமான தொடர்புகள் இருந்தன.
எனக்குச் சிறப்பான விரிவுரையாளர்கள் கிடைத்தனர். டாக்டர் ஹம்சா அதிகாலையில் பாடம் போதிப்பார். கணிப்பியைப் பயன்படுத்தும் மாணவர்களை விட வேகமாகக் கணிதத்தைச் செய்து முடிக்கும் திறனை அவர் கொண்டிருந்தார்.
நேர்மை, தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் இருந்தால் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள முடியும் என்பதை UKM பல்கலைக்கழகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.
இதன் காரணமாகவே சி.ஐ.டி. பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேர்மை மற்றும் தரமிக்க சேவை வழங்கும் எண்ணம் மிக அவசியம் என்று வலியுறுத்தி வருகிறேன். சி.ஐ.டி-ஆல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் குறிப்பாக ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடுவதில் அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் நோக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
குண்டர் கும்பல், மனித கடத்தல், இயங்கலை வழி சூதாட்டம், கொள்ளை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் வாகனத்தைத் திருடுதல் போன்றவற்றில் ஈடுபடும் கும்பல் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை எதிர்த்து போராடுவதற்கான வழிமுறைகள் உளவுத் துறை தலைமையிலான போலீஸ் துறையிடம் இருக்க வேண்டும்.
அத்தகைய மோசடி நடவடிக்கைகளை விட போலீஸ் துறை ஒரு படி மேலே இருப்பதை உறுதி செய்ய வேண்டும், இதன் மூலம் குற்றச் செயல்களைத் திறம்பட கட்டுப்படுத்த முடியும்", என்கிறார் அயோப் கான்.
"சி.ஐ.டி அதிகாரிகளின் எந்தத் தவறுகளையும் பொறுத்து கொள்ள முடியாது. அவர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் நிச்சயமாக அதனைச் சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் காவல்துறையின் நற்பெயரைக் கெடுத்து விடுவார்கள். உயர்நெறிகளையும் நேர்மையையும் பேணுதல் மற்றும் சிறந்த சேவையை உறுதி செய்தல் ஆகியவை அவர்களின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்", என்று வலியுறுத்துகிறார் அயோப் கான்.