தெலுக் இந்தான், அக்டோபர்.06-
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கா கோர் மிங், இந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு காசே மடானி நிதி உதவியை வழங்கினார். வழங்கப்பட்ட நிதி உதவியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1.50 மில்லியன் ரிங்கிட்டாகும்.

தமது தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 11 தமிழ்ப்பள்ளிகளுக்கும், 258 இந்திய மாணவர்களுக்கும் மொத்தம் 14 லட்சத்து 86 ஆயிரத்து 600 ரிங்கிட்டை ங்கா கோர் மிங் வழங்கினார். பேரா மாநிலத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி வரலாற்றில் வழங்கப்பட்ட நிதி உதவியில் இதுவே மிகப் பெரியதாகும்.

நேற்று தெலுக் இந்தானில் காசே மடானி நிதி அளிப்பை தொடக்கி வைத்து உரையாற்றிய ங்கா கோர் மிங், "எந்தவோர் இனத்தைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் குடும்ப நிதி நெருக்கடி காரணமாக பள்ளியிலிருந்து விலகவோ அல்லது ஓரங்கட்டப்படவோ கூடாது என்பதை உறுதிச் செய்வதற்காக மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த காசே மடானி நிதி உதவி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

கல்வி என்பது தேசிய வளர்ச்சியின் மையமாகும். தமிழ்ப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் பெறுவதை உறுதிச் செய்வதில் மடானி அரசு எப்போதும் உறுதி பூண்டு இருப்பதுடன், அந்த இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

இந்த நிதி உதவியின் மூலம் நமது குழந்தைகள், குறிப்பாக B40 குடும்பங்கள், இந்த மாத இறுதியில் கொண்டாடப்படும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, சிறந்து விளங்கவும், தங்கள் குடும்பங்களின் சுமையைக் குறைக்கவும் அதிக உற்காகத்துடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி உதவியில் 12 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் தெலுக் இந்தான் நாடாளுமன்றத்தில் உள்ள 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, லாடாங் உலு பெர்ணம் 2 தமிழ்ப்பள்ளி, லாடாங் நோவா ஸ்கோஷியா 1 & 2 தமிழ்ப்பள்ளிகள், நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளி மற்றும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆகியவை அடங்கும்.

மேலும், மொத்தம் 258 தமிழ் மாணவர்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 600 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு தொடக்கப்பள்ளி மாணவருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட்டும், ஒவ்வொரு இடைநிலைப்பள்ளி மாணவருக்கும் தலா 1,200 ரிங்கிட்டும், ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் 2 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.








