கோலாலம்பூர், அக்டோபர்.13-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளித் திருநாளைக் கொண்டாடவிருக்கும் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்.ரமணன் தெரிவித்தார்.
அதே வேளையில் இந்திய சமூகம் உட்பட மலேசியர்கள், ஒவ்வொரு நிலையிலும் நாட்டின் பிரதான பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விடுபட்டு விமாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு மடானி அரசாங்கத்தின் வலுவான கட்டமைப்பின் உறுதிப்பாட்டை, இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
எஸ்கேஎம் எனப்படும் மலேசிய கூட்டுறவு ஆணையம் மற்றும் மேலும் சில தரப்பினருடன் இணைந்து தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுங்கை பூலோ தொகுதியில் மடானி மலிவு விற்பனைத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து டத்தோ ஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
மித்ரா, தெக்குன், அமானா இக்தியார் ஆகியவற்றிற்கு 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடானது, பல்வேறு தொழில்முனைவோர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்திய சமூகவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரும் உந்துதலாக இருக்கும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.