Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கல்வி என்பது மலேசிய இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி புரட்சிக்கான விதை
சிறப்பு செய்திகள்

கல்வி என்பது மலேசிய இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி புரட்சிக்கான விதை

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.08-

கல்வி என்பது இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி புரட்சிக்கான விதையாகும். அத்தகையக் கல்வி பறிக்கப்படக்கூடாது, மாறாக, மனிதக் கண்ணியத்தை உயர்த்த ஒவ்வோர் இந்தியருக்கும் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தினார் ஒரு கல்விமானாகிய டாக்டர் R. சிவபிரகாஷ்.

கடந்த மாதம் கோலாலம்பூர், சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்தியர்களின் எழுச்சி மீதான ஆய்வரங்கின் தொடர் பயண நிகழ்வு, கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி பினாங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“இந்தியர்களின் கல்வி நெருக்கடி மற்றும் கல்வியின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கு, பொதுமக்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. 70 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். அத்துடன் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பு வாயிலாக சமூக ஊடகங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர்.

ஓர் அர்த்தம் பொதித்த இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ள பினாங்கு மட்டுமின்றி ஈப்போ மற்றம் கூலிமிலிருந்தும் அதிகமானோர் வருகை புரிந்தனர்.

இந்திய சமூகத்தில் குறிப்பாக B40 தரப்பினரின் நலனுக்காக டிக் டாக் நெறியாளர் சுதன் மற்றும் அவர் தலைமையிலான பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர். மலேசிய கல்வி முறையில் இந்திய சமூகம் இன்று எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள் குறித்த ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான விவாதத்திற்கான ஒரு களமாக இந்த ஆய்வரங்கு அமைந்தது.

நிகழ்வின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான டாக்டர் சிவபிரகாஷ், நாட்டின் கல்வி முறையானது, உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக சமத்துவமானதாக இருப்பதை உறுதிச் செய்வதற்கு, கல்வியின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவை என்று தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தின் கல்வி நெருக்கடி என்பது வெறும் அணுகல் பற்றியது மட்டுமல்ல. இது பெரும்பாலும் ஊக்குவிப்பதை விட, விலக்கி வைக்கும் ஒது முறையைப் பற்றியதாகும். கல்வி ஏணியைச் சரி செய்தால், ஒவ்வொரு குழந்தையும் இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் வெற்றியின் உச்சத்திற்கு உயர முடியும். அந்த வகையில் இந்தியச் சமுதாயத்தின் கல்வி வழிகாட்டலுக்குத் தங்களை போன்றவர்களை சமூகம் புறக்கணிக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் என்பது கல்வி திறன் சார்ந்ததாகவும், வேலை வாய்ப்புக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அது திவெட், டிஜிட்டல் மற்றும் ஏஐ உள்ளிட்ட துறைகளைச் சார்ந்து இருக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால இந்திய சமூகம், தேசிய வளர்ச்சி நீரோடையில் தங்கு தடையின்றி பயணிக்க முடியும் என்று டாக்டர் சிவபிரகாஷ் விவரித்தார்.

Related News