சுங்கை பூலோ, அக்டோபர்.07-
வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பெர்லிஸ் முதல் ஜோகூர் வரை B40 தரப்பைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் தீபாவளி அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய 11,600 கூடைகள் வழங்கப்படவிருப்பதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் தெரிவித்தார்.

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சும், அமானா இக்தியார் மலேசியாவும் இணைந்து இந்த உதவிப் பொருட்களை வழங்கவிருப்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

ஜாத்தி வகை அரிசி, சமையல் எண்ணெய், முருக்கு மாவு, மசாலை வகைகள், பருப்பு உட்பட தீபாவளி திருநாளுக்கான பலதரப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய தீபாவளி அன்பளிப்பு கூடைகள், நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பலவீனமான இந்தியக் குடும்பங்களுக்கு பெருநாள் காலத்தில் பேருதவியாக இருக்கும் அதே வேளையில் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அத்தியாவசியப் பொருட்களுக்கான அன்பளிப்பு கூடைகளை வழங்கிய நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

இந்த தீபாவளி அன்பளிப்பானது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எந்தவோர் இனத்தையும் புறக்கணிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இதற்காக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

முன்னதாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு கூடை வழங்கப்பட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் இந்த உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் 8 லோரிகளை டத்தோ ஶ்ரீ ரமணன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் அமானா இக்தியார் மலேசியாவின் துணை இயக்குநர் Norsharizal Mahsyarin மற்றும் டத்தோ ஶ்ரீ ரமணனின் அந்தரங்க செயலாளர் டத்தோ B. அன்புமணி உட்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








