கோலாலம்பூர், அக்டோபர்.01-
நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள புடி 95 எனும் ரோன் 95 பெட்ரோல் சலுகைத் திட்டம், எவ்விதச் சிக்கலின்றி சமூகமாக நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதுவரை கிடைக்கப் பெற்ற பூர்வாங்கக் கண்காணிப்பு தகவலின்படி, எண்ணெய் நிலையங்களில் குறிப்பாக உச்ச நேரத்தில் அனைத்து செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறவிருக்கின்ற புடி திட்டத்தின் அமலாக்கம் சமூகமாக நடைபெறுவது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கைப்பேசி வழி தாம் தகவல் அளித்து இருப்பதாக சைஃபுடின் தெரிவித்தார். வழக்கமான நேரத்தை விட உச்ச நேரமே மிக முக்கியம். அதிகமான வாகனமோட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பும் அந்த நேரத்தில் எண்ணெய் நிலையங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன, சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டுள்ளனவா? எதிர்நோக்கும் சவால்கள் யாவை முதலியவற்றை அறிய முற்பட்ட போது, அனைத்துமே சுமூகமாக நடைபெறுவதைக் காண முடிகிறது என்று சைஃபுடின் விளக்கினார்.
அந்த அளவிற்கு நன்கு திட்டமிட்ட நிலையில் புடி 95 திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
அனைத்து எண்ணெய் நிலையங்களிலும் வாகனமோட்டிகள் தங்களின் மை காட் அட்டையைப் பயன்படுத்தியே ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியும் என்பதே புடி 95 திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அந்தத் திட்டம் முதல் நாளிலேயே வெற்றி பெற்றுள்ளது என்று சைஃபுடின் பெருமிதம் தெரிவித்தார்.