ஷா ஆலாம், டிசம்பர்.01-
2025 ஆம் ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அனைத்துலக புத்தகக் கண்காட்சியை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

ஷா ஆலம், Setia City மாநாட்டு மையத்தில் தொடங்கிய இந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் மாநில அரசியார் தெங்கு பெர்மைசுரி நோராஷிகினும் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமிமற்றும் மாநில பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்தூரா முகமட் ஆகியார் சுல்தான் தம்பதியரை வரவேற்று மாநாட்டு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த புத்தகக் கண்காட்சியில் 14 நாடுகள் கலந்து கொண்டதாக டத்தின் படுகா மஸ்தூரா தமது உரையில் தெரிவித்தார். சீனா, Guangdong நகர், இரண்டாவது முறையாக இந்த புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, சென்னையில் நடத்திய அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் தாங்கள் பங்கு கொண்டதை நினைவுக்கூர்ந்த டத்தின் படுகா மஸ்தூரா, இந்த முறை, சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரசாங்கம் பங்கு கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் B.N. ரெட்டி கலந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசு அமைத்திருந்த புத்தகக் கூடாரத்தை பார்வையிட்டதுடன் பங்கேற்பாளர்களுக்குத் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தவிர சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைவர் அழகிய பாண்டியன் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன் உட்பட பலர் இந்த அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.








