ஈப்போ, அக்டோபர்.03-
வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு பேரா மாநில அரசு, இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்தவிருக்கிறது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் மாநில அரச குடும்பத்தினர், மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாரனி முகமட், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர்.
இந்த திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 10 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.
ஈப்போவில் பேரா மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சிவநேசன் இதனைக் கூறினார்.
இந்தியர்களின் கலை, கலாச்சாரம் உட்பட மலேசியர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கும் பேரா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதால் தீபாவளி பொது உபசரிப்பில் மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேரா மாநில மனித வளம், சுகாதாரம் மற்றும் இந்தியர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான சிவநேசன் தெரிவித்தார்.