சுங்கை பட்டாணி, அக்டோபர்.02-
இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சுங்கை பட்டாணியில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமான முத்தையாஸ் கேஷ் & கேரி, தனது வருடாந்திர நடவடிக்கையாக பெரிய அளவிலான நலத் திட்ட முயற்சியாக 12,500 இந்தியா மாணவர்களுக்கு உணவு வழங்கியது.
30 வருடங்களுக்கும் மேல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த அறப்பணி மூலம், கெடா மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் தயார்படுத்தப்பட்ட சைவ உணவுகள் வழங்கப்பட்டன. இம்முறை கெடா மட்டுமில்லாமல் பினாங்கில் உள்ள பள்ளிகளுக்கும் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
கெடா மாநிலத்தில் 59 தமிழ்ப்பள்ளிகள், கோலா முடா மாவட்டத்தில் 12 இடைநிலைப் பள்ளிகள், சுங்கை பட்டாணியில் 5 தனியார் பாலர் பள்ளிகள், பினாங்கில் 7 தமிழ்ப்பள்ளிகள், பினாங்கில் உள்ள ஓர் ஆசிரமம், பேராக், கெரிக்கில் ஒரு தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ் கங்காரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி என மொத்தம் 86 பள்ளிகள் பயன் பெற்றன.
சுங்கை பட்டாணி, ஜாலான் கோல கெட்டில், பெக்கான் லாமாவில் உள்ள நவதுர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் சமையல் ஏற்பாடுகள் அனைத்தும் முந்தைய நாள் இரவு முதல் நடைபெற்று வந்த வேளையில் இன்று காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உணவு தயார் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பட்டன.
இந்த தொண்டுப் பணியில் உள்ளூர் அரசு சாரா இயக்கங்கள், சங்கங்கள் மற்றும் பொது இயக்கங்களின் உறுப்பினர்கள், உள்ளூர் இளையோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சுற்று வட்டார மக்கள் என சுமார் 350 தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு நல்கி, இத்திட்டத்தை வெற்றி அடையச் செய்தனர். முத்தையாஸ் கேஷ் & கேரி நிறுவன உரிமையாளர் திரு. வாசுதேவன் முத்தையா கூறுகையில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருடா வருடம் இந்தப் பணியைத் தாங்கள் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆகமவிதிப்படி அன்னதானம் வழங்கி வரும் முத்தையாஸ் நிறுவனத்தின் இந்த அறப்பணி போற்றத்தக்கதாகும் என்று சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியின் துணை தலைமையாசிரியர் ஜெயசங்கர், புறப்பாட நடவடிக்கை ஆசிரியர் ராமசாமி மற்றும் சிவகுமார் விவரித்தனர்.
முத்தையாஸ் நிறுவனத்தின் இந்த அருந்தொண்டுக்கு தங்களைப் போன்றவர்கள் பணம் ஏதும் கொடுத்து உதவ முடியாவிட்டாலும் அவர்களின் அறப்பணிக்கு உதவிட தொண்டூழிய அடிப்படையில் உதவிடுவதாக வாடிக்கையாளரான பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.
முத்தையாஸ் நிறுவனத்தின் அறப்பணிக்கு உதவிடுவதில் தாங்கள் மகிழ்ச்சி கொள்வதாக மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
தங்களின் இந்த முயற்சிக்கு தொண்டூழிய அடிப்படையில் உதவிக்கரம் நீட்டிய தன்னாவர்வாளர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். இதன் மூலம் தன்னார்வத் தொண்டின் மதிப்புகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஒற்றுமையின் நலனுக்காக ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் ஒரு சமூகத்தின் உணர்வையும் குறிக்கிறது. ஓர் அர்த்தமுள்ள தொண்டுப் பணியை வெற்றிகரமாக மாற்றுவதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முத்தையாஸ் கேஷ் & கேரி நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வாசுதேவன் முத்தையா குறிப்பிட்டார்.







