ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-
பினாங்கு இந்து சபாவின் ஏற்பாட்டில் தீபாவளி ஒன்று கூடும் விருந்து பினாங்கு இந்து சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒற்றுமை உணர்வின் அடிப்படையில் பினாங்கு இந்து சபா இந்த ஒன்று கூடும் விருந்தினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விருந்து நிகழ்ச்சியில், ஆயர் ஈத்தாம் காவல் அதிகாரி எஎஸ்பி எம்.கருணாகரன் முனுசாமி, முன்னாள் பினாங்கு இந்து சபா தலைவர் டத்தோ எம்.ஞானசேகரன், பினாங்கு நகர ஆலோசகர் தி.விஸ்வநாதன், முதலமைச்சர் சிறப்பு அதிகாரி அமுதா கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து பினாங்கு இந்து சபா உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

115 பழமை வாய்ந்த பினாங்கு இந்து சபா இன்று வரையிலும் மக்களுக்காக இயங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது என பினாங்கு இங்கு சபா தலைவர் எம்டிஎஸ் பரஞ்சோதி சோனைமுத்து தெரிவித்தார். எங்களால் முடிந்தவரை மக்களுக்கு நிதி உதவியும் பல சேவைகளையும் செய்து வருகிறோம். தற்போது கூட தீபாவளியை முன்னிட்டு 75 முதல் 80 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கினோம். அதோடு பினாங்கு இந்து சபாவில் இருப்பையும் வரலாற்றினையும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக் கூறும் முயற்சியாக பினாங்கு இந்து சபா புத்தகம் வெளியீடு காண உள்ளது என அவர் தெரிவித்தார். அதற்கு உதவும் வகையில் பொதுமக்கள் பினாங்கு இந்து சபா முந்தைய காலத்தில் எடுத்த புகைப்படங்கள் இருப்பின் அதனை நிர்வாகத்திற்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

பினாங்கு நகர ஆலோசகர் விஸ்வநாதன் பேசுகையில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே பலவற்றைச் செய்து முடிக்க முடியும். பினாங்கு இந்து சபாவின் அடையாளத்தை மீண்டும் நிலை நாட்ட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதனைத் தவிர்த்து, பினாங்கு வாழ் மக்களுக்கு கல்வி, பல வேலை வாய்ப்புகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை அதிகம் உள்ளன. அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்னுடைய முக்கிய கடமையாகும் என்பதையும் அவர் தெரிவித்தார். அதனால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போதும் பினாங்கு நகர ஆலோசகரை நாடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், டிஜேன் விருது பெற்று குமரன் அவர்களுக்கும் பிகேதி விருது பெற்ற திருமதி அஞ்சலை தேவி அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அதோடு பல முக்கிய பிரமுகர்களுக்குப் பினாங்கு இந்து சபா சிறப்பு செய்தது. மக்களுக்காக சேவையாற்றி வந்த பினாங்கு இந்து சபா இந்நாள் வரையில் மக்களுக்காகத் துணை நிற்கிறது என்பதை பறைசாற்றும் வண்ணம் இந்தத் தீபாவளி விருந்து உபசரிப்பு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.








