சிங்கப்பூர், ஜூலை.20-
சிங்கப்பூரில் நடைபெற்ற 10வது கூட்டு கருத்தரங்கு மற்றும் 41வது பொதுச் சேவை விளையாட்டுப் போட்டிகள் மூலம் மலேசியாவும் சிங்கப்பூரும் இரு தரப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. மலேசியக் குழுவில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பக்கர், மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பொதுச் சேவைத் துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். அதே நேரத்தில் சிங்கப்பூர் பேராளர் குழுவிற்கு அந்நாட்டின் பொதுச் சேவைத் துறைத் தலைவர் திரு. லியோ யிப் தலைமையேற்றார்.

"மாற்றத்தை வழி நடத்துதல்: 21 ஆம் நூற்றாண்டிற்கான நம்பகமான மற்றும் பயனுள்ள பொதுச் சேவை" என்ற ஹ்கஹ்ருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு, எதிர்காலப் பொதுச் சேவைத் துறை சவால்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தியது.

சிங்கப்பூரில் பொதுச் சேவைத் துறைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் மலேசியா-சிங்கப்பூர் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மடானி மலேசியா கட்டமைப்பிற்குள் நல்லாட்சி, உள்ளடக்கம் மற்றும் நல்வாழ்வு ஆகிய கொள்கைகளுக்கு இணங்க, நிர்வாகம், இலக்கவியல் மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே இரு தரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டன.