ஈப்போ, டிசம்பர்.05-
பேரா மாநில மஇகா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டைக் கல்வி நிதி உதவியாக உயர்க்கல்வி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்று பேரா மஇகா தொடர்புக்குழுத் தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஶ்ரீ எம். இராமசாமி கூறினார்.

இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களைத் தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் மஇகா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநில மஇகாவின் கல்வி நிதி உதவியைப் பெற்ற மாணவி ஏஞ்சலின் கூறுகையில், தாதியர் துறையில் மூன்று வருட டிப்ளோமா படிப்பை மேற்கொள்வதற்கு இந்த நிதி உதவி தமக்குப் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மஇகா-வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை டான் ஶ்ரீ இராமசாமி சுட்டிக் காட்டினார்.








