புத்ராஜெயா, டிசம்பர்.18-
புத்ராஜெயாவில் மனித வள அமைச்சராக இன்று அதிகாரப்பூர்மாகப் பணியைத் தொடங்கிய டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், தமது தலைமையில் மனித அமைச்சு அமல்படுத்தக்கூடிய புதிய திட்டங்களையும், ஏற்கனவே திட்ட வடிவில் இருந்த முதன்மை திட்டங்களையும் இன்று அறிவித்தார்.
இதில் முதன்மையானது, இந்தியச் சமூகத்தின் நலன் கருத்தில் கொள்ளப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் உறுதி அளித்தார். குறிப்பாக, மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனித வள மேம்பாட்டு நிதியகமான HRDcorp மூலம் இந்திய இளம் தொழில்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதற்கான உத்தேசத் திட்டத்தைத் தாம் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

முன்பு, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சராக டத்தோ ஶ்ரீ ரமணன் பொறுப்பேற்று இருந்த போது, இந்தியா சமுகத்திற்காக பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தினார். தற்போது மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்றப் பின்னர் ஏதாவது திட்டங்களைக் கொண்டுள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு இந்திய சமூகத்திற்கு நிச்சயம் இருக்கும்.
நிச்சயமாக.... இந்தியத் தொழில்துறையை உள்ளடக்கிய சிகை அலங்கரிப்பு நிலையங்கள், பொற்கொல்லர்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றுவதற்கு இளம் திறன் படைத்த ஆள்பலத்தை உருவாக்குவதற்கு HRDcorp மூலம் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தைத் தாம் கொண்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்
இன்று காலை 9.07 மணிக்கு தமது பணி நேர அட்டையைப் பதிவுச் செய்த டத்தோ ஶ்ரீ ரமணன், உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் தனது துணை அமைச்சர் கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் மற்றும் மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோஃப் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்ட விவரங்களைக் கூறினார்.
HRDcorp பயிற்சியானது, வேலை வாய்ப்புகளையும் அவர்களே தேடித் தரக்கூடியதாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
முன்னதாக, வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டும், தொழிலாளர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வல்ல மனித வள அமைச்சின் காப்புறுதித் திட்டம் குறித்தும் டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கம் அளித்தார்.








