திசைகளின் தலையங்கம்
மலேசியாவின் அரசியல் வரலாற்றில் 'அம்னோ' என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அது இந்த நாட்டின் சுதந்திரக் காற்றுடன் கலந்த ஒரு பேரியக்கம். தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், துன் ரசாக் மற்றும் துன் ஹுசேன் ஓன் போன்ற மாபெரும் தலைவர்களால் செதுக்கப்பட்ட இந்த இயக்கம், மஇகா மற்றும் மசீச போன்ற உறுப்புக்கட்சிகளை அரவணைத்து, 'பல்லின ஒற்றுமை' என்ற தாரக மந்திரத்துடன் நாட்டை வழிநடத்தியது.
ஆனால், இன்று அதே அம்னோவின் இளைஞர் அணித் தலைமைகளின் போக்கு, அக்கட்சியின் பாரம்பரியத்திற்கே சவாலாக மாறியிருப்பது வேதனைக்குரியது.
அம்னோவின் வீழ்ச்சி அல்லது அதன் மீதான அதிருப்தி என்பது திடீரென உருவானதல்ல. நாட்டின் மூன்றாவது பிரதமராகவும், 'ஒற்றுமையின் தந்தை' என்றும் போற்றப்பட்ட துன் ஹுசேன் ஓனின் புதல்வர், டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் அவர்கள் 2005-ம் ஆண்டு அம்னோ இளைஞர் பிரிவு மாநாட்டில் 'கிரிஸ்' கத்தியை உயர்த்திக் காட்டிய அந்த நிமிடம், மலேசிய அரசியலில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.
Maruah என்ற ‘மலாய்க்காரர்களின் கண்ணியம்' எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்தச் செயல், சக இனத்தவர்களிடையே நம்பிக்கையற்ற நிலையை விதைத்தது. அன்று தொடங்கிய அந்தத் தீவிரவாத அரசியல் போக்கு, இன்றுவரை அக்கட்சியைப் பாதித்து வருகின்றது.
இன்று அம்னோ இளைஞர் அணியின் தலைவராக இருக்கும் டாக்டர் அக்மால் சாலேவின் அணுகுமுறை, ஹிஷாமுடின் தொடங்கி வைத்த அந்தப் போக்கின் அடுத்த கட்டமாகவே பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக காலுறை விவகாரம், காலணிகள் முதல் தேசியக் கொடி வரை எனப் பல்வேறு விவகாரங்களில் அவர் எடுத்து வரும் அதீத நிலைப்பாடுகள், நாட்டின் இன ஒற்றுமைக்கு வலுசேர்ப்பதாக இல்லை. இனம் மற்றும் சமயத்தின் பெயரால் அரசியலை முன்னெடுப்பது, ஒரு குறிப்பிட்ட தரப்பினரைக் கவரக்கூடும். ஆனால், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இது விரிசல்களையே அதிகப்படுத்தும்.
அம்னோ மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், பழைய கம்பீரத்துடன் எழுந்து நிற்க வேண்டும் என்பது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் ஆசை. ஆனால், டாக்டர் அக்மால் போன்ற தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளும், செயல்பாடுகளும் இருக்கும் வரை மற்ற இன மக்களின் ஆதரவைப் பெறுவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். மலாய்க்காரர்களின் நலன்களைப் பேணும் ஒரு மரம் செழிக்க வேண்டுமானால் அதன் வேர்கள் நஞ்சாக இருக்கக்கூடாது.
அம்னோவின் முன்னோடிகள் விதைத்த 'சகிப்புத்தன்மை' மற்றும் 'கூட்டுறவு' என்ற நன்னெறிகளை மறந்து, வெறும் உணர்ச்சிகரமான அரசியலை மட்டும் கையில் எடுத்தால், அது அந்த உன்னதமான இயக்கத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.
இனவாத அரசியலை விடுத்து, தேசத்தின் ஒற்றுமையையும், பொருளாதார மேன்மையையும் முன்னிறுத்தும் தலைவர்களே இன்றைய அம்னோவிற்குத் தேவை. மலாய்க்காரர்களின் உரிமையை பாதுகாப்பது என்பது மற்ற இனங்களைச் சாடுவதோ அல்லது சிறுமைப்படுத்துவதோ அல்ல.
அம்னோவின் முன்னோடிகள் 'மலாய்க்காரர்களின் பாதுகாப்பு' என்பதை ஒரு தற்காப்பு அரணாகப் பார்த்தார்களே தவிர, அதை மற்ற இனங்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை. அதே போன்றதொரு பக்குவமான தலைமை உருவானால் மட்டுமே அம்னோ மீண்டும் மக்களிடம் நற்பெயரைப் பெற முடியும்.
இல்லையெனில், வரலாறு வழங்கிய பெருமைகளைத் தற்போதைய தலைமைகளே சிதைத்து விட்டனர் என்ற அவப்பெயரை அம்னோ சுமக்க வேண்டியிருக்கும்.








