கோலாலம்பூர், செப்டம்பர்.26-
ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த செப்டம்பர் 22 முதல் இன்று செப்டம்பர் 26-ஆம் தேதி வரையில், மலேசியா பெவிலியன் ஆஃப் வேர்ல்ட் எக்ஸ்போ 2025 என்ற கண்காட்சி நடைபெற்று வருகின்றது. பினாங்கு மாநிலத்தின் முதலீட்டு நிலப்பரப்பை மேம்படுத்துவதையும், ஜப்பானிய வர்த்தகத் தலைவர்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முதலீட்டு ஊக்குவிப்பு கண்காட்சியை இன்வெஸ்ட்பினாங்கு வழிநடத்தியது. இந்நிகழ்ச்சியில் பினாங்கின் சொந்த ஐசி வடிவமைப்பு நிறுவனங்களான Silicon X, SkyeChip, Tenasic ஆகியவை இணைந்திருந்தன.

இந்நிகழ்ச்சியில், இன்வெஸ்ட்பினாங்கு மற்றும் பங்கேற்ற ஐசி வடிவமைப்பு நிறுவனங்கள் மலேசியா பெவிலியனில் நடைபெற்ற சிறிய கண்காட்சியில் தங்களது நவீன அம்சங்களை அறிமுகப்படுத்தின. இந்நிகழ்ச்சி தொழில்துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பினாங்கு மலேசியா வர்த்தகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ், மலேசியாவின் பொருளாதாரச் சக்தியிலும், உலகளவிலான புதிய கண்டுபிடிப்புகளிலும் பினாங்கு மாநிலத்தின் பங்களிப்புக் குறித்து எடுத்துரைத்தார்.

மலேசியாவின் இரண்டாவது சிறிய மாநிலமாக பினாங்கு இருந்தாலும் கூட, கடந்த 1970-ஆம் ஆண்டு முதல், ‘சிலிக்கான் வேலி ஆஃப் தி ஈஸ்ட்’ என்று பெயரெடுத்துள்ளதாக சாவ் கோன் இயோ குறிப்பிட்டுள்ளார். இந்த அங்கீகாரமானது, Intel, Hewlett Packard (இப்போது Keysight Technologies மற்றும் Agilent Technologies), Robert Bosch, AMD, Litronix (இப்போது Osram Opto Semiconductors), Hitachi (இப்போது Renesas Electronic), Clarion மற்றும் National Semiconductor ஆகிய எட்டு முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது அடித்தளமாகப் பினாங்கைத் தேர்வு செய்தது முதல் உருவானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான் பினாங்கின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்று என்று குறிப்பிட்ட சோவ், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-இன் அரை ஆண்டு வரையில், ஜப்பானின் முதலீடுகள் பினாங்கு மாநிலத்தில் மொத்தமாக 1.4 பில்லியன் ரிங்கிட் எனும் அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதே வேளையில், தற்போது பினாங்கில் சுமார் 70 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அதில் Advantest, Ibiden, Kobelco, Renesas மற்றும் Towa ஆகியவை அடங்கும் என்றும் சோவ் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், புதிய கூட்டாண்மைக்கான வாயில்களை திறக்க விரும்புகிறோம். குறிப்பாக செமிகண்டக்டர் வடிவமைப்பு, டிஜிட்டல் நவீனமயமாக்கல், மற்றும் இணை மேம்பாட்டு திட்டங்களில், பினாங்கின் பலவீனங்கள் மற்றும் ஜப்பானின் திறமைகள் ஒன்றிணைந்து இன்னும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றாரவர்.

மாநிலத்தின் கூட்டாளிகளான JETRO கோலாலம்பூர் மற்றும் MITI, MIDA, மற்றும் MATRADE உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், திட்டத்தை ஒழுங்கமைத்ததற்காக இன்வெஸ்ட்பினாங்கிற்க்கும் சோவ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பின் ஆதரவுடன் இன்வெஸ்ட் பினாங்கு ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கு, "பினாங்கு: தென்கிழக்கு ஆசியாவின் நவீன பொருளாதாரத்திற்கான நுழைவாயில்" என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.

இந்த கருத்தரங்கில் 25-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. தொடக்க உரையை பினாங்கு முதல்வர் வழங்கியதுடன், இன்வெஸ்ட்பினாங்கு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் சிறப்பு விளக்கவுரை வழங்கினார்.
கருத்தரங்கைத் தவிர, பினாங்கு மாநில அரசின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான இன்வெஸ்ட்பினாங்கும், பங்கேற்கும் நிறுவனங்களும் MATRADE ஏற்பாடு செய்த வர்த்தக இணைப்பு (business matching) அமர்வில் பங்கேற்றன.