ஷா ஆலாம், ஆகஸ்ட்.01
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேலோங்கச் செய்யும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி கடந்த வாரம் சனிக்கிழமை சிலாங்கூர், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

நான்காம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் 1,320 மாணவர்கள் பங்கேற்றனர் என்று 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மிட்லண்ட்ஸ் சதுரங்கப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முனியாண்டி தெரிவித்தார்.
தமிழ்பள்ளியில் பயிலும் மாணவர்கள், மற்றும் தமிழ்ப்பள்ளியில் படித்து முடித்து இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் ஆகியோருக்காகப் பிரத்தியேகமாக இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக இளங்கோவன் குறிப்பிட்டார்.

முதல் ஆண்டில் 500 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் 800 மாணவர்கள், மூன்றாம் ஆண்டில் 1000 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் இவ்வாண்டில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,320 பேராக அதிகரித்துள்ளதாக இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு என்ற முழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் தமிழ்ப்பள்ளியில் பயின்றால், அறிவு சார்ந்த இது போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியும், அதற்காக தங்களைப் போன்றவர்கள் ஆதரவை வழங்க காத்திருக்கின்றனர் என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனங்களில் விதைக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.

இந்தச் சதுரங்கப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்திற்கும், இப்போட்டி சிறக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்கி பெரும் உந்துதலாக இருந்த பள்ளி வாரியத் தலைவர் க. உதயசூரியனுக்கும் இளக்கோவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நாடு தழுவிய நிலையில் 110 தமிழ்ப்பள்ளிகள் பங்கு கொண்ட இந்தச் சதுரங்கப் போட்டிக்குத் தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகத்தைத் தந்து பங்கேற்கச் செய்த பெற்றோர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இளங்கோவன் குறிப்பிட்டார்.