கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
காலங்காலமாகத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் தோட்டப் பாட்டாளிகளுக்கு வீட்டுரிமைச் சட்டத்தை பிஎஸ்எம் கட்சி, தனது வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம் தயாரித்துள்ளது.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி தோட்டப்புறங்களில் உள்ள பாட்டாளிகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கக் கோரி இன்று நாடாளுமன்றத்தை நோக்கி 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் படையெடுத்தனர்.

பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் ஜெயகுமார், துணைத் தலைவர் அருட்செல்வம், வழக்கறிஞர் பவானி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பேனர்களை ஏந்தி தோட்டப் பாட்டாளிகள் நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்த போது, காவல் துறையினர் அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அருட்செல்வம் கீழே விழுந்த போது தோட்டப் பாட்டாளிகள் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கூச்சலிட்டனர்.

நாங்கள் தோட்டப் பாட்டாளிகள். எங்களை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே அவர்கள் முன்னேறினர். இறுதியாக தோட்டப் பாட்டாளிகள் நாடாளுமன்ற முன் கேட் கதவு வரை வந்து நின்றனர்.

அப்போது கெஅடிலான் கட்சியின் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன் வந்து தோட்டப் பாட்டாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியூடின் ஹசான் தலைமையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் துணை அமைச்சர் குலசேகரனும் மகஜரைப் பெற்றுக் கொண்டார்.