Dec 31, 2025
Thisaigal NewsYouTube
2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?
சிறப்பு செய்திகள்

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.31-

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன? ஒரு விரிவான பார்வை

2026-ஆம் ஆண்டு என்பது வெறும் புத்தாண்டுக்கான உறுதிமொழிகளை எடுக்கும் ஆண்டாக மட்டும் இல்லாமல், வாழ்க்கைச் செலவீனம், டிஜிட்டல் பாதுகாப்பு முதல் சட்ட அமலாக்கம் வரை மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல மாற்றங்களுக்குத் தயாராகும் ஆண்டாக அமையும். அடுத்த ஆண்டு RMK13 எனப்படும் 13-வது மலேசியத் திட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

2026-இல் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ…

கல்வித் துறை மாற்றங்கள்

ஜனவரிக்குத் திரும்பும் பள்ளித் தவணை: கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மார்ச் மாதம் தொடங்கிவந்த கல்வி ஆண்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஜனவரி 2026 முதல் தொடங்கும்.

  • குழு A மாநிலங்கள் (கெடா, கிளந்தான், திரங்கானு): ஜனவரி 11 முதல் டிசம்பர் 31 வரை.

  • குழு B மாநிலங்கள் (இதர மாநிலங்கள்): ஜனவரி 12 முதல் டிசம்பர் 31 வரை.

தொடக்கப்பள்ளி உதவித்தொகை (BAP): 5.2 மில்லியன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தலா RM150 வீதம் மொத்தம் RM800 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2026 தொடக்கத்தில் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

MRSM - SBP சேர்க்கை: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் MRSM - SBP பள்ளிகளுக்கான விண்ணப்ப முறை ஒருங்கிணைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

சுற்றுலா - வரிச் சலுகைகள்

மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026 (VM2026): "மலேசியா ட்ரூலி ஆசியா" எனும் கருப்பொருளில் சுற்றுலாத்துறை பெரிய எழுச்சி காணும். இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் RM700 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாவிற்கு RM1,000 வரி விலக்கு: உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க, தனிநபர் வரி செலுத்துவோர் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவுகளுக்காக RM1,000 வரை வரி விலக்கு கோரலாம்.

E-Invois விலக்கு: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) சுமையைக் குறைக்க, RM1 மில்லியனுக்கும் குறைவான வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மின்-விலைப்பட்டியல் (E-invois) முறை கட்டாயமாக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விலக்குகளும் குடும்ப நலன்களும்

சுற்றுச்சூழல் நட்பு சாதனங்களுக்கு வரி விலக்கு: கழிவு உரம் தயாரிக்கும் இயந்திரங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப சாதனங்களை வாங்கினால் RM2,500 வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

குழந்தை பராமரிப்பு: 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பராமரிப்புக்கும் கல்விச் செலவுகளுக்கும் RM3,000 வரி விலக்கு இனி பதிவுசெய்யப்பட்ட குழந்தை, சிறார் பராமரிப்பு மையங்களுக்கும் பொருந்தும்.

மாற்றுத்திறனாளி (OKU) குழந்தைகள்: 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கான வரி விலக்கு வரம்பு RM6,000-லிருந்து RM10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

அரசு ஊழியர் சம்பள உயர்வு (SSPA 2-ம் கட்டம்): ஜனவரி 22-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள உயர்வு அமலுக்கு வரும். இதில் கீழ்நிலை, தொழில்முறை குழுக்களுக்கு 7 விழுக்காடும், உயர்மட்டக் குழுக்களுக்கு 3 விழுக்காடும் உயர்வு கிடைக்கும்.

நீதிபதிகளின் சம்பளம்: 2015-க்குப் பிறகு முதல் முறையாக நீதிபதிகளின் சம்பளம் ஜனவரி 1 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்தப்படும்.

சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (SARA): 18 வயதுக்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்களுக்கு பிப்ரவரி பாதியில் RM100 நிதியுதவி வழங்கப்படும்.

டிஜிட்டல் பாதுகாப்பும் சட்ட அமலாக்கமும்

சமூக ஊடக உரிமம்: 8 மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்ட சமூக ஊடகங்கள் ஜனவரி 1 முதல் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும். இது குறிப்பாகக் குழந்தைகள் பாதுகாப்பையும் குடும்பங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OnSA): இணைய மோசடிகள், 'Deepfake' போன்ற தொழில்நுட்பத் தவறுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் அமலுக்கு வரும்.

சமூகச் சேவைச் சட்டம்: பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் அல்லது குப்பை போடுபவர்களுக்கு RM2,000 அபராதம் அல்லது 12 மணிநேர சமூக சேவை தண்டனையாக விதிக்கப்படும்.

போக்குவரத்து அபராதம்: "எவ்வளவு சீக்கிரம் கட்டுகிறீர்களோ, அவ்வளவு குறைவு" என்ற முறையில் முன்கூட்டியே அபராதம் கட்டினால் 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படும்.

அரசியலும் விளையாட்டும்

இளைஞர் வயது வரம்பு: இளைஞர்களுக்கான வயது வரம்பு 15-லிருந்து 30-ஆகக் குறைக்கப்படுகிறது.

மலாக்கா மாநிலத் தேர்தல்: 2026 டிசம்பரில் மலாக்கா சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படும் என்பதால், அந்த மாநிலத் தேர்தல் 2026-இல் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

SUKMA 2026: ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சிலாங்கூரில் சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

 

13-வது மலேசியத் திட்டம் (RMK13)

2026 முதல் 2030 வரையிலான இந்தத் திட்டம், மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வட்டாரத் தலைவராக மாற்றுவதையும், ஒரு முன்னேறிய சமுதாயத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் 2026-ஆம் ஆண்டை மலேசியர்களுக்கு ஒரு புதிய சகாப்தமாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ஆண்டாகவும் மாற்றியுள்ளன.

 

Related News