ஷா ஆலாம், ஆகஸ்ட்.11-
தேசபக்தி உணர்வும், நாட்டை நேசிக்கும் உற்சாகமும் சூழ்ந்த நிலையில், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் 2025ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின ஊர்வலம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனின் மக்கள் சேவை மையம் ஏற்பாட்டில் நடைபெறற் இந்த ஊர்வலமானது வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாட்டின் 68 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு பகுதியாக அமைந்தது.

ஷா ஆலாம், ஶ்ரீ மூடாவில் தொடங்கிய இந்த ஊர்வலம், எம்பிஎஸ்ஜே மண்டலம் 7 வழியாக கோத்தா கெமுனிங் தொகுதியின் பல பகுதிகளைக் கடந்துச் சென்றது. பயணத்தின் போது, தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் பறக்க விடப்பட்டு, ஒற்றுமை உணர்வு மேலோங்கச் செய்யப்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் ஃபோர் வீல் டிரைவ் வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கொடிகள் மற்றும் சுதந்திர தின அலங்காரத்துடன் பல்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாகச் சென்றது மக்களின் பெரும் கவன ஈர்ப்பாக மாறியது.

ஊர்வலத்தின் போது, மக்களிடையே தேசப்பற்றை விதைக்கும் வகையில் பங்கேற்பாளர்கள், பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் கொடியை வழங்கினர்.
சுதந்திர மாதத்தையொட்டி ஜாலூர் கெமிலாங் கொடியைப் பறக்க விடும் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

ஊர்வலம் நடைபெற்ற பாதைகளில், பங்கேற்பாளர்கள் சுதந்திர மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் கொடிகளை வழங்கி, “கொடியைப் பறக்க விடுங்கள்” என்ற பிரச்சாரத்துக்கு வலு சேர்த்தனர்.
இந்த வாகன ஊர்வலம் என்பது வெறும் அணிவகுப்பு மட்டுமல்ல, இது பல இன மக்களின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, மலேசியர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாக உற்சாகம் மிகுந்த சூழலில் நடத்தப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்தித் தினத்தின் முக்கியத்துவத்தை கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் ஒருமித்த உணர்வுடன் கொண்டாடுவதைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிரகாஷ் சம்புநாதன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.