கோலாலம்பூர், அக்டோபர்.13-
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஆதரவுடன் இலக்கவியல் அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பொது உபசரிப்பு, வரும் அக்டோபர் 18 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர், கேஎல் சென்ரல், லோட் எஃப் தளத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவிருக்கிறது.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.
பல்வேறு இனம், சமயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைச்சின் பணியாளர்கள், தொழில்துறை சார்ந்த சமுதாயத்தினர் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலக்கவில் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“சஹாயா மடானி, சீனார் பெர்பாடுவான்” என்ற கருப்பொருளுடன், இந்த தீபாவளி பொது உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அடையாளம் மட்டும் அல்ல, மடானி மலேசியாவின் கட்டமைப்பிற்குள் மலேசியர்களின் ஞானம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையையும் குறிக்கிறது என்று இலக்கவியல் அமைச்சு தெரிவித்துள்ளது.