பிறை, அக்டோபர்.06-
தனது பிறை சட்டமன்றத் தொகுதியில் சமூக நலன் சார்ந்த அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வரும் அதன் சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு தொகுதியைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கினார்.

கடந்த சனிக்கிழமை பிறை, சாய் லேங் பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடந்த ஆண்டு பிறை சட்டமன்ற அலுவலகம் சார்பில் 580 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அன்பளிப்புகள் பெற்றவர்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகமான உயர்ந்து இருப்பது, ஓரிட மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பலன் அடைந்துள்ளனர்.

தொகுதியில் தங்களைப் பதிவுச் செய்து கொண்ட ஒவ்வொரு வசதி குறைந்த பெறுநருக்கும் 120 ரிங்கிட் மதிப்புள்ள 700 க்கும் மேற்பட்ட தீபாவளி பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

இந்த அன்பளிப்புப் பொட்டலம், பெரியளவில் இல்லையென்றாலும் அதனை உவகையுடன் பெற்று புன்சிரிப்பு உதிர்த்து மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட ஒவ்வொரு முகத்திலும் காணப்படக்கூடிய ஆனந்தம், தமது நெஞ்சைத் தொடுவதாக உள்ளது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

பிறை சட்டமன்றத் தொகுதியைப் பொருத்த வரை இனம், மதம் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஓரிட மக்கள், அனைவருக்கும் இந்த உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே தமது தலையாய நோக்கமாகும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.








