சைபர்ஜெயா, செப்டம்பர்.25-
STH ICT Consultant நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஆசியா பசிபிக் பல்கலைக்கழகம், JOBA அகாடமி ஆஸ்திரேலியா, பயோனிட்டி, மலேசிய ஐ.சி.டி சங்கம் ஆகியவற்றின் இணை ஆதரவுடன் தேசிய அளவிலான ஆவணப்படப் போட்டி 2025 சிறப்பாக நடைபெற்றது.
STH ICT CONSULTANT நிறுவனத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான இந்த ஆவணப்படப் போட்டி, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சைபர்ஜெயா, ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

“Your Vision. Your Voice. Your Story” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டி, மாணவர்களின் படைப்பாற்றலையும் சமூகப் பார்வையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கியத் தளமாக அமைந்தது.
இப்போட்டி இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டது. ஒன்றாம் நிலையில் “My School: Then and Now” என்ற தலைப்பில் போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் வரலாற்றையும், அதன் தற்போதைய வசதிகளையும், முன்னேற்றங்களையும் ஒப்பீட்டு வடிவில் வெளிப்படுத்தும்படி கூறப்பட்டிருந்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட ஆவணப்படங்களில் சிறந்த படங்களை நடுவர்கள் குழு தேர்வு செய்தனர்.
அதன் படி ஒன்றாம் நிலையில், ஈப்போ, St. Philomena Convent தமிழ்ப்பள்ளி மாணவி ஹர்ஷிகா சண்முகநாதன் சாம்பியனாக தேர்வாகினார். Ladang Bidor Tahan தமிழ்ப்பள்ளி மாணவி கவியேத்ரா ராவ் A. சந்திர ராவ் முதல் இடத்தையும், சுபாங், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவன் தஷிலன் சுந்தரேசன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இரண்டாம் நிலை போட்டியில், “Malaysian Education Towards the World” என்ற தலைப்பில் மாணவர்கள் மலேசியக் கல்வியின் உலகளாவிய வளர்ச்சியையும் பங்களிப்பையும், அடுத்தக்கட்ட மேம்பாடுகள் குறித்த தொலைநோக்குப் பார்வைகளையும் வெளிப்படுத்தினர்.
இதில் Ladang Sungai Choh தமிழ்ப்பள்ளி மாணவி காவியா ராதாகிருஷ்ணன் சாம்பியனாகவும், Ladang Cairo தமிழ்ப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா குணராஜ் முதல் இடத்தையும், சுபாங், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த திஷலன்ட் சுந்தரேசன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இப்போட்டியை Asia Pacific University –யின் டாக்டர் கோகில மலர் காளிசாமி, டிஎஸ் உமாபதி ஏகநாதன் மற்றும் டி.எஸ். டாக்டர் மணிமேகலை ராஜேந்திரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர்.

இப்போட்டி குறித்து விவரித்த STH ICT CONSULTANT நிறுவனத்தின் தலைவர் திலகவதி பாலச்சந்திரன், AI போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் STH ICT CONSULTANT நிறுவனத்தின் தலைவர் திலகவதி பாலச்சந்திரன், நிர்வாக இயக்குநர் சசிகுமார் ராமா, நிறுவன பாட்னரான தவநேசன் வேணுகோபால், கல்வி ஆலோசகர் சாந்தி அச்சுதன் மற்றும் தேசிய தமிழ்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றத்தின் தலைவர் தமிழரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.