ஈப்போ, அக்டோபர்.06-
2025 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளையொட்டி ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய புந்தோங், கெபாயாங் மற்றும் பெர்சாம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கிட்டதட்ட 700 இந்திய மாணவர்களுக்கு காசே மடானி திட்டத்தின் வாயிலாக கல்வி நிதி மற்றும் ஆலயத்திற்கு மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை ஈப்போ, புந்தோங் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெபாயாங் சட்டமன்ற உறுப்பினருமான ங்கா கோர் மிங் நேரடியாக வருகை புரிந்து இந்திய மாணவர்களுக்குக் கல்வி நிதியை வழங்கினார்.
பேரா மாநில ஜசெக தலைவருமான ங்கா கோர் மிங், மொத்தம் ஒன்றரை லட்சம் ரிங்கிட் இந்த கல்வி நிதியானது, இந்திய மாணவர்களுக்குக் குறிப்பாக, படிவம் 4, 5 மற்றும் 6 இல் பயிலும் ஏழை மற்றும் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரவும், தேவையான கல்வி உபகரணங்களை வாங்கவும், டியூஷன் கட்டணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரனுடன் இணைந்து இந்தக் கல்வி நிதியை வழங்கிய தெலுக் இந்தான் நாடாளுன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங், மடானி அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கும், உள்ளூர் சமூகத்திற்கும் உதவி வழங்குவதில் தொடர்ந்து உறுதி பூண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
காசே மடானி திட்டத்தின் வாயிலாக ஈப்போ பாராட் நாடாளுன்றத் தொகுதியை உள்ளடக்கிய 23 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 625 இந்திய மாணவர்களுக்கு தலா 400 ரிங்கிட் நிதி உதவியை ங்கா கோர் மிங் நேரடியாக வழங்கி இருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தெரிவித்தார்.

தவிர இந்நிகழ்வில் புந்தோங், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலின் மண்டபத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் தனது அமைச்சிலிருந்து ங்கா கோர் மிங் ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தை வழங்கியிருப்பதாக துளசி மனோகரன் தெரிவித்தார்.








