கோலாலம்பூர், அக்டோபர்.10-
கடந்த 20 வருடங்களாக சிக்கலை எதிர்நோக்கிய பகாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான நிரந்தரத் தீர்வை இன்று பதிவு செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சரியான கட்டடம் இல்லாமல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இந்தப் பள்ளியைக் கட்டுவதற்கு, சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டதாக பிரதமர் இன்று 2026 ஆம் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறித்து இலக்கவியல் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கெபினில் இயங்கிய இந்தப் பள்ளி எதிர்நோக்கிய துயருக்கு, இந்த வருட தீபாவளி கொண்டாட்டத்துக்கு முன்பதாகவே, ஒளி பிறந்து விட்டதாக அமைச்சர் கோபிந்த் சிங் வர்ணித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் மடானி அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நல்ல, ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலில் படிக்கத் தகுதியானவர்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது. அதோடு இந்தப் பள்ளி சிறந்த பள்ளியாக முன்னேறி, நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நல்ல திறன் வாய்ந்த, தெளிந்த சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.
Rakyat’s Budget எனப்படும் மக்களை முன்னிலைப்படுத்தும் 2026 வரவு செலவு திட்டத்தில் ஏறக்குறைய 90 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களும் சீனர்களும் வசிக்கும் சிறுபான்மையின கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்கு செலவிட்டப்படும் என்பதை கோபிந்த் சிங் டியோ பதிவுச் செய்தார்.
வரும் அக்டோபர் 20-ஆம் நாளன்று நாம் தீபத் திருநாளைக் கொண்டாடும் வேளையில், 2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா ரொக்க உதவித் தொகையின் நான்காம் கட்டம் பகிர்வு, அக்டோபர் 18- ஆம் தேதி முன்கூட்டியே மக்களுக்கு வழங்கப்படும்.
மலேசியர்களுக்கான எஸ்டிஆர் மற்றும் சும்பங்கான் அசாஸ் ரஹ்மா ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு பகிரப்பட்ட 600 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது நமது இந்திய சமூகம் 1 பில்லியன் ரிங்கிட் ரொக்க உதவியைப் பெறும்.
நிலையான வருமானம் மற்றும் சம்பளச் சீட்டுகள், ஆவணங்கள் இல்லாத மலேசியர்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானங்களைப் பெறுவதற்கு உதவும் அரசாங்க உத்தரவாதத் திட்டமான ஸ்கிம் ஜமீனன் கிரெடிட் பெருமஹானுக்கான ஒதுக்கீடும் - 200 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.9 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிதி பகிர்வும் திட்டங்களும் தவிர, இந்திய சமூக பொருளாதார நல்வாழ்வுக்கான அமைப்புகளுக்கு, கடந்த ஆண்டை போலவே மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றுக்கு 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.