Jan 11, 2026
Thisaigal NewsYouTube
கடல் கடந்தும் ஒலிக்கும் தமிழ்க்குரல்: சென்னையில் 'அயலகத் தமிழர் திருவிழா 2026' கோலாகலத் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி முழக்கம்
சிறப்பு செய்திகள்

கடல் கடந்தும் ஒலிக்கும் தமிழ்க்குரல்: சென்னையில் 'அயலகத் தமிழர் திருவிழா 2026' கோலாகலத் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி முழக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.11-

“உலகத் தமிழர்களின் இரண்டாம் தாய்வீடு தமிழ்நாடு" என்ற முழக்கத்தோடு, அயலகத் தமிழர் தின விழா - 2026 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விண்ணதிரும் முழக்கங்களுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து திரண்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட பேராளர்களின் முன்னிலையில், தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “உலகெங்கும் வாழும் தமிழர்களின் உழைப்பும், அறிவும் உலக வரலாற்றை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் வேர்கள் இங்கே இருந்தாலும், உங்கள் விழுதுகள் அகிலம் முழுவதும் பரவி தமிழினத்திற்குப் பெருமை சேர்க்கின்றன" என உலகத் தமிழர்களுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை வழங்கினார்.

இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு மிக பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஏ. சிவநேசன், பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோரின் தலைமையில், டத்தோ பி. கமலாநாதன், பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன், டத்தோ பி. சகாதேவன், டத்தோ மோகன் ஷான் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் மாநாட்டின் முதல் வரிசையில் அமர்ந்து மலேசியத் தமிழர்களின் ஆளுமையை உலகிற்குப் பறைசாற்றினர்.

குறிப்பாக, மலேசியாவிலிருந்து வந்திருந்த இந்தப் பெருந்திரள் பேராளர்களைக் கண்டு தமிழகத் தலைவர்கள் ஆச்சரியமடைந்ததோடு, மலேசிய மண்ணில் தமிழ்மொழி காக்கப்படும் விதத்தையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற சங்கத் தமிழனின் தத்துவத்தை உலகளாவிய வாழ்வியலாக மாற்றியவர்கள் அயலகத் தமிழர்கள். கடல் கடந்து சென்றாலும், கையில் ஒரு பிடி மண்ணும், நெஞ்சில் ஒரு துளி தமிழும் ஏந்திச் சென்ற நம் இனம், இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உயர்ந்து நிற்கிறது.

மலேசியாவின் ரப்பர் தோட்டங்கள் முதல் அமெரிக்காவின் நாசா வரை தமிழனின் வியர்வை சிந்தாத இடமில்லை; அவனது அறிவு தீண்டாத துறையில்லை. மொழியால் சிதறிக் கிடந்தாலும், உணர்வால் ஒரு குடையின் கீழ் திரண்டிருக்கும் தமிழினத்தின் இந்த உலகளாவிய மாண்பு, உலக இனங்களுக்கே ஒரு முன்னோடிப் பாடமாகும் என்று மாநாட்டின் தொடக்க விழாவில் புகழ்மாலை சூட்டப்பட்டது.

தொடக்க விழாவில், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான பறை இசை, கரகாட்டம் மற்றும் மயிலாட்டத்துடன் ஒரு வண்ணமயமான அரங்கேறியது. அயலகத் தமிழர்களுக்காகத் தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விளக்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழினத்தின் தொன்மையும், உலகளாவிய அதன் பரவலும் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு மிகப் பெரிய சொத்து என்று குறிப்பிட்டார்.

மாநாட்டு மண்டபம் முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகள், மலேசியப் பேராளர்களுக்கும் பிற நாட்டுத் தமிழர்களுக்கும் இடையே ஒரு கலாச்சாரப் பாலமாகத் திகழ்ந்தது.

இன்று தொடங்கியுள்ள இந்த இரண்டு நாள் மாநாடு, உலகத் தமிழர்களின் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு வரலாற்றுப் பயணமாக மாறியுள்ளது. கடல் கடந்தும் காக்கப்படும் தமிழின் பெருமை இன்று சென்னையில் சங்கமித்துள்ள நிலையில், "நாங்கள் எங்கே வாழ்ந்தாலும் எமது ஆன்மா தமிழால் இணைந்திருக்கிறது" என்ற செய்தியை இந்த மாநாடு உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.

Related News

100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் -  தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!

100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் - தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?

சித்தியவானில் சிறப்பாக நடைபெற்றது starz 2.0 கலாச்சாரத் திருவிழா

சித்தியவானில் சிறப்பாக நடைபெற்றது starz 2.0 கலாச்சாரத் திருவிழா

HRDcorp மூலம் இந்திய இளம் தொழில்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி: மனித வள அமைச்சராகப் பணியைத் தொடங்கிய டத்தோ ஶ்ரீ ரமணன் உறுதி

HRDcorp மூலம் இந்திய இளம் தொழில்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி: மனித வள அமைச்சராகப் பணியைத் தொடங்கிய டத்தோ ஶ்ரீ ரமணன் உறுதி