திசைகளின் இன்றைய தலையங்கம்
கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல; அது ஒரு தேசத்தின் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் கட்டமைக்கும் உயிர்நாடி. 1986 முதல் 1991 வரை நாட்டின் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே, மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வித் தரத்தில் சமரசமற்ற மாற்றங்களைக் கொண்டு வந்தவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

அன்று "பிள்ளைகளைக் கழிப்பறையைச் சுத்தம் செய்யவா அனுப்புகிறோம்?" என்று கேட்ட சில பெற்றோர்களுக்கு, "கழிப்பறையே இல்லாத பள்ளிகளுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்" என்று அவர் கொடுத்த பதிலடி, ஆடம்பரத்தை விட அடிப்படைத் தேவையும் சுய ஒழுக்கமும் முக்கியம் என்பதை உணர்த்தியது. அந்த உன்னதச் சிந்தனையாளர் இன்று பிரதமராக, 'தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் RPN 2026-2035' மூலம் மீண்டும் ஒரு கல்விப் புரட்சியைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் நேற்று அறிவித்த அதிரடி மாற்றங்களில் மிக முக்கியமானது. குழந்தைகளின் கல்வி தொடங்கும் வயதைக் குறைத்திருப்பதாகும். 5 வயதில் பாலர் பள்ளிக் கல்வி மற்றும் 6 வயதில் முதலாம் ஆண்டு கல்வி என்பது மலேசியாவை உலகத்தரம் வாய்ந்த கல்வி நாடுகளின் வரிசையில் நிறுத்தியுள்ளது.

அறிவியல்பூர்வமாக, ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி 5 முதல் 6 வயதிற்குள் மிக வேகமாக இருக்கும் என்பதால், இந்த வயதில் முறைசார்ந்த கல்வியைத் தொடங்குவது அவர்களின் கற்கும் திறனைப் பன்மடங்கு அதிகரிக்கும்.
உலக நாடுகளை உற்று நோக்கினால், அன்வாரின் இந்த முடிவு எவ்வளவு சரியானது என்பது புரியும். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் 5 வயதிலேயே குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகின்றனர். அன்வாரின் இந்தத் திட்டம், மலேசியக் குழந்தைகள் உலகளாவிய மாணவர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் அவர்களின் ஆரம்பக்கால அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. இது காலத்தின் கட்டாயமான, ஆனால் மிகவும் துணிச்சலான முடிவாகும்.
அடுத்தபடியாக, கல்வியை மதிப்பெண் வேட்டையாக மாற்றிய UPSR மற்றும் PT3 தேர்வுகளைத் தவிர்த்து, 2027 முதல் 4-ஆம் ஆண்டு மற்றும் படிவம் 3 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய 'மதிப்பீட்டு முறை' அல்லது Learning Matrix ஒரு மைல்கல்லாகும். தேர்வு பயமின்றி, மாணவர்களின் நிஜமான திறமையைச் சோதிக்கும் இந்த முறை, அவர்களை இயந்திரங்களாக மாற்றாமல் சிந்தனையாளர்களாக மாற்றும். இதன் மூலம் மனப்பாடக் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சராக இருந்த போதே நாட்டின் கல்வி முறையில் சீர்திருத்தங்களை விதைத்தவர். அன்று அவர் வலியுறுத்திய "சுய ஒழுக்கம்" மற்றும் "பள்ளி பராமரிப்பு" போன்ற சிறப்புகள், இன்று 2026-லும் அவர் எடுக்கும் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன.
பள்ளிக் கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவரது அன்றைய நிலைப்பாடு, இன்று ஜப்பான் போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த பண்பாகும். அத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே கல்வியை வெறும் பாடப்புத்தகமாகப் பார்க்காமல், வாழ்வியல் கலையாகப் பார்க்க முடியும்.
இந்த 'தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம்' வெறும் காகித வடிவிலான திட்டம் அல்ல; இது மலேசியாவின் அடுத்த 10 ஆண்டு கால எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வரைபடம். 5 வயதிலேயே கல்வியைத் தொடங்குவதன் மூலம், மாணவர்கள் தங்களின் உயர்க்கல்வியையும் தொழில் வாழ்க்கையையும் ஒரு வருடம் முன்னதாகவே தொடங்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இது நாட்டின் உற்பத்தித் திறனை உயர்த்துவதோடு, இளைஞர்களை விரைவாகத் தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்த உதவும்.

கல்விக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிரதமர் நாட்டுக்குக் கிடைப்பது பெரும் பேறு. அன்வார் இப்ராஹிம் அவர்கள் கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்கள், வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமான கல்வியை உறுதிச் செய்யும் என்பதில் ஐயமில்லை. தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அவர் ஒதுக்கியுள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடுகளும், மலாய், ஆங்கிலம் முதலிய மொழிப் புலமை மீதான அவரது அக்கறையும் பாராட்டுதலுக்குரியவை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், அன்வாரின் இந்தச் சீர்திருத்தங்கள் மலேசியாவை ஆசியாவின் கல்வி மையமாக மாற்றும் என்பதில் உறுதியுள்ளது. ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளின் கல்வி மேன்மையை மலேசியாவிலும் சாத்தியப்படுத்தத் துடிக்கும் இந்தப் போராளித் தலைவனின் கனவுக்கு நாம் அனைவரும் துணை நிற்போம். 'திசைகள்' அன்வாரின் இந்தத் தொலைநோக்குத் திட்டங்களை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறது.
அதே சமயம், நவீன காலத்தின் தேவையறிந்து தேசியப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை TVET எனும் தொழில்நுட்பக் கல்வியை அடிப்படைப் பாடத்திட்டமாகப் புகுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகள் விடுபட்டிருப்பது சற்றே ஏமாற்றத்தை அளிக்கிறது. பிரதமர் அவர்கள் அடிக்கடி முழங்குவது போல, 'தேசிய நீரோட்டத்தில் எந்தவோர் இனமும் பின்தங்கிவிடக்கூடாது' என்ற உன்னத நோக்கம் மெய்ப்பட வேண்டுமானால், தேசியப் பள்ளிகளுக்கு இணையாகத் தாய்மொழிப் பள்ளிகளுக்கும் TVET முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படைப் பள்ளிக் கல்வியிலிருந்தே இந்தத் தொழில்நுட்பத் திறன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் சென்றடையும்போதுதான், அவர்கள் எதிர்காலத் தொழில் சந்தையில் சமமான போட்டியாளர்களாகத் திகழ முடியும்.
கல்விப் புரட்சியாளர் மாண்புமிகு பிரதமர் அவர்கள், இக்கோரிக்கையை உணர்வுப்பூர்வமாகப் பரிசீலித்து உரிய ஆவணங்களைச் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.








