Nov 25, 2025
Thisaigal NewsYouTube
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைத்துவப் பயிற்சி
சிறப்பு செய்திகள்

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைத்துவப் பயிற்சி

Share:

சிரம்பான், நவம்பர்.24-

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலம் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான தலைமைத்துவப் பயிற்சி கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிரம்பான், அரேனா பிரிமியம் தங்கும் விடுதியில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில தொழிற்சங்க விவகார இலாகாவின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சியை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் 60 பேர் கலந்து கொண்ட இந்த பயிற்சியில் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தலைமைத்துவப் பண்புக்கூறுகள், தொழிற்சங்கவாதிகளுக்கு இருக்க வேண்டிய ஆளுமை அம்சங்கள் குறித்து டத்தோ G. சங்கரன் மிக அழகாக விளக்கினார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநில செயலாளர் P. சாந்தகுமார் தலைமைத்துவத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

தொழிற்சங்க கூட்ட முறைகள், கோரிக்கைகளின் அணுகுமுறைகள், AIA காப்புறுதித் திட்டம் பற்றிய விளக்கவுரைகள், சாந்தகுமார் முன்னிலையில் தோட்டப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் முதல் நாள் நிகழ்வில் இடம் பெற்றன.

இரண்டாவது நாள் நிகழ்வில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கும் மாபாவிற்கும் (MAPA) இடையிலான கூட்டுச் சம்பள ஒப்பந்தம் குறித்து பேரா மாநில தோட்டத் தொழிற்சங்க செயலாளர் எம். குணாசன் விளக்கம் அளித்தார்.

நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில தொழிற்சங்க விவகார இலாகாவின் இயக்குநர் புவான் ஹஃபிஸா நபிலா முகமட் இட்ரிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இப்பயிற்சியில் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களின் பங்களிப்பை, சாலைப் போக்குவரத்து குற்றவியல் பாதுகாப்பு அம்சங்கள், ஃபொம்கா எனப்படும் பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தை சேர்ந்த விஜயகுமாரின் விளக்கவுரை, காப்புறுதி குறித்து B. காளிதாஸின் தெளிவுரை முதலிய அங்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு மிகக் பயனாக அமைந்தது.

Related News