ஷா ஆலாம், செப்டம்பர்.29-
கடந்த சனிக்கிழமை, தமிழ்நாடு, கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பந்திங் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய பாப்பா ராய்டு வீரமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“டிவிகே அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரச் சம்பவம் 40-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. இது நம் அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.
“இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடமாக இருந்தாலும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பாதுகாப்பையும் சரியான திட்டமிடலையும் உறுதிச் செய்வதன் முக்கியத்துவத்தை இச்சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
“இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தலைவர்களும் காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து சரியான முறையில் வழிநடத்துவார்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.
“மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இந்தக் கடினமான நேரத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் வலிமை பெறட்டும்” என்று பாப்பா ராய்டு தெரிவித்துள்ளார்.