கோலாலம்பூர், ஜூலை.14-
மலேசியாவின் முன்னணி மாடல் அழகியான வனிஷா வசந்தநாதன், தாம் சார்ந்துள்ள தொழில்துறைப் பிரதிநிதித்துவத்தை மறுவடிவமைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
வனிஷா வசந்தநாதனைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவம் என்பது டோக்கனிசம் என்று சொல்லப்படும் ஒப்புக்காக அல்லது மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும். அது உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கலாச்சார மரியாதையின் வேரூன்றலாக இருக்க வேண்டும் என்கிறார்.
சிங்கப்பூரின் மாடல் அழகிகளுக்கான பேஷன் சஞ்சிகையான Vogue Singapore இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த முதல் மலேசிய இந்தியப் பெண் என்ற பெருமையை வனிஷா வசந்தநாதன் பெற்றுள்ளார்.
மாடலும் பாரம்பரிய பயிற்சி பெற்ற ஒடிசி நடனக் கலைஞருமான இவர், கடந்த பத்தாண்டுகளில் Milan Fashion Week மற்றும் பல சர்வதேச நிகழ்ச்சிகளில் மாடலிங் செய்துள்ளார்.
இந்த நிகழ்வுகளில் பலவற்றுக்காக பணியமர்த்தப்பட்ட சில கருமை நிற மாடல் அழகிகளில் ஒருவராகத் திகழும் வனிஷா, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இன்னொருவரைப் போல பாவனை காட்டும் டோக்கனிசத்தில் கவனம் செலுத்துவதை விட அதற்கு அப்பாற்பட்ட ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த 31 வயது வனிஷா.
உண்மையில், வனிஷா, ஒரு மாடலாக மாறியதற்கான காரணங்களில் ஒன்று, அழகுத் தரங்களை மீறுவதும், தன்னைப் போலவே தோற்றமளிக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஆகும் என்கிறார்.
கருமையான பெண்கள் பலர் தற்போது இந்த மாடல் துறைக்கு வருகின்றனர். இந்தியர்கள் மட்டும் அல்ல, பிற இனத்தவர்களும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக வனிஷா கூறுகிறார்.