Oct 19, 2025
Thisaigal NewsYouTube
தேசிய நாள் கொண்டாட்டம்: புத்ராஜெயாவில் தேசப்பற்றை வெளிப்படுத்திய மக்கள் வெள்ளம்!
சிறப்பு செய்திகள்

தேசிய நாள் கொண்டாட்டம்: புத்ராஜெயாவில் தேசப்பற்றை வெளிப்படுத்திய மக்கள் வெள்ளம்!

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.31-

மலேசியாவின் 68-வது தேசிய தினக் கொண்டாட்டம், "MALAYSIA MADANI , RAKYAT DISANTUNI" என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இன்று 31 ஆகஸ்டு 2025 ஆம் நாள் புத்ராஜெயா சதுக்கத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. சூரியன் உதிக்கும் முன்னரே, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு குவிந்து, ஜாலூர் கெமிலாங் கொடியை அசைத்தபடி, தேசப்பற்று உணர்வில் திளைத்தனர். இந்த சிறப்புமிக்க நிகழ்வில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோரின் வருகை கூடுதல் சிறப்பு சேர்த்தது. அவர்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, டத்தோ ஶ்ரீ ஃபாடிலா யூசோஃப், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வரவேற்றனர்.

இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது நீல நிற புரோட்டோன் சட்ரியா நியோ காரைத் தானே ஓட்டி வந்து பெரும் வியப்பை ஏற்படுத்தினார். WWW1 என்ற பதிவு எண் கொண்ட இந்தக் காரில் அவருடன் பேரரசியும் பயணித்தார். அரசரின் இந்த எளிமையானச் செயல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், நாட்டுப்பண் 'நெகாராகூ' இசைக்கப்பட்டு, நாட்டின் 14 மாநிலங்களின் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் 14 குண்டுகள் முழங்க, தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் கம்பீரமாக ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வின் உச்சக்கட்டமாக, 14 ஆயிரத்து 62 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு, நாட்டின் பல்வேறு துறைகளின் வலிமையையும், பெருமையையும் பறைசாற்றியது. மலேசியாவின் பாதுகாப்புப் படைகளான தரைப்படை, வான்படை , கடற்படை, காவற்படை ஆகியன தங்கள் நவீன ஆயுதங்களோடும் வாகனங்களோடும் அணிவகுத்துச் சென்ற போது, மக்கள் ஆரவாரம் செய்தனர். நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் செய்யும் தியாகங்களுக்கு இது ஒரு மரியாதையாக அமைந்தது.

அரசு, தனியார் துறைகளின் நிகராளிகள், மாணவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் துறைகளின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார வண்டிகளுடன் அணிவகுத்துச் சென்றனர். குறிப்பாக, இந்த ஆண்டு, ஆசியான் 2025 தலைமைத்துவம், 2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு” ஆகிய புதிய பிரிவுகளும் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தன. இது மலேசியாவின் வட்டார, அனைத்துலக நிலையிலான பங்களிப்பை எடுத்துக் காட்டியது. மேலும், புகழ் பெற்ற அனிமேஷன் கதாபாத்திரங்களான ஏஜென் ப்ட் அலி, போபோய்போய், ஓமார் & ஹானா ஆகியோரின் வருகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வ மேடையில் இருந்து இறங்கி, சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று, பொதுமக்களுடன் நேரடியாகப் பேசினார். குழந்தைகளுடன் கை குலுக்கி, வயதானவர்களிடம் நலம் விசாரித்து, வெளிநாட்டுப் பயணிகளுடன் கலந்துரையாடியது அவரது எளிமையையும், மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தியது. இந்தச் செயல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், கலை - கலாச்சாரப் படைப்புகளாகும். புகழ்பெற்ற பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நூர்ஹலிஸா, மலேசியா மடானி, ரக்யாட் டிசந்துனி என்ற தேசிய தினப் பாடலைப் பாடி, மக்கள் அனைவரையும் தன்னுடன் சேர்ந்து பாட வைத்தார். 1,000 கலைஞர்கள் பங்கேற்ற மலேசியா மடானி சிறப்பு நிகழ்ச்சி, நாட்டின் பாரம்பரியக் கலைகளை அழகாகப் பிரதிபலித்தது. மேலும், 2,000 பள்ளி மாணவர்கள் மனிதச் சங்கிலி காட்சிகளை உருவாக்கி, தேசப்பற்றை உணர்த்தினர்.

வானில் நடைபெற்ற வான்படையின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. 30க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் புத்ராஜெயாவின் வான்வெளியில் சீறிப் பாய்ந்து, கண்கவர் வடிவங்களை உருவாக்கின. வானூர்திகளின் இடி போன்ற சத்தம், அங்கிருந்தவர்களின் தேசப்பற்று உணர்வை மேலும் அதிகரித்தது.

இந்த தேசிய தினக் கொண்டாட்டம், மலேசியாவின் பல்வேறு இன, மத, கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாக அமைந்தது. மலேசியாவின் வலிமை, பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவை இந்த நிகழ்ச்சியில் முழுமையாக வெளிப்பட்டன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், தேசிய உணர்வையும், மலேசியர்கள் அனைவரும் ஒன்று என்ற பிணைப்பையும் உறுதிப்படுத்தின.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!