Dec 3, 2025
Thisaigal NewsYouTube
PENN 2.0: மலேசிய இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கென ரிம100 மில்லியன் ஒதுக்கீடு - மடானி அரசின் முன்னெடுப்பு!
சிறப்பு செய்திகள்

PENN 2.0: மலேசிய இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கென ரிம100 மில்லியன் ஒதுக்கீடு - மடானி அரசின் முன்னெடுப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

நாடெங்கிலும் மலேசிய இந்தியப் பெண் தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் நோக்கில் Prosperity, Empowerment, and a New Normal for Indian Women (PENN) எனப்படும் புதிய திட்டம் தற்போது 100 மில்லியன் ரிங்கிட் மொத்த ஒதுக்கீட்டுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2024 ஏப்ரல் 13 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட PENN திட்டம், பெண்கள் பொருளாதாரத் தடைகளைக் கடந்து சிறு வணிகங்களைத் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக நிதி உதவிக்கான வாய்ப்பு குறைவாக உள்ள கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு, மடானி அரசின் புதிய திட்டத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை உயர்த்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

திட்டத்தின் அமைப்புமற்றும் தாக்கம்

இது குறித்து Amanah Ikhtiar Malaysia (AIM) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தோ முகமது ஷமீர் அப்துல் அசீஸ் கூறுகையில், “PENN 1.0 ஆரம்பத்தில் ரிம50 மில்லியன் ஒதுக்கீட்டைப் பெற்றது. அது சில மாதங்களிலேயே முழுமையாக வழங்கப்பட்டது. இதையடுத்து, 2025 ஜூன் 3 அன்று PENN 2.0-க்கு கூடுதலாக ரிம50 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதனால் மொத்த நிதி ரிம100 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழுக்களுக்கு அரசாங்கம் காட்டும் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது” என்றார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “PENN திட்டமானது, குறிப்பாக B40 குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது மாத வருமானம் 4,830 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். இத்திட்டம் மானியத்துக்குப் பதிலாக கடன் அடிப்படையில் இயங்குகிறது. இதன் மூலம் பெண்கள் 3,000 முதல் 5,000 ரிங்கிட் வரையிலான சிறிய கடன்களுடன் தொடங்கலாம். கடனாளர்கள் Srikandi திட்டத்தின் கீழ் படிப்படியாக மேம்படுத்தப்பட்ட கடன்களைப் பெறலாம். 30,000 ரிங்கிட் வரை, சில நேரங்களில் 54,000 ரிங்கிட் வரையில் கூட தகுதிக்கு ஏற்ப கடன் வழங்கப்படுகின்றது. இது வணிக முயற்சிகளுக்கான பொருளாதாரத் திட்டத்தையும், கல்வி, வீட்டு மேம்பாடு, வணிக மேம்பாடு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான சமூக திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

Amanah Ikhtiar Malaysia (AIM) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தோ முகமது ஷமீர் அப்துல் அசீஸ்

PENN 1.0 இன் வலுவான தாக்கம்

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பற்றியும், வழங்கப்பட்ட நிதி குறித்தும் முகமது ஷமீர் அப்துல் அசீஸ் கூறுகையில், “PENN 1.0 (ஏப்ரல் 2024 – மே 2025) காலத்தில் மொத்தம் 6,259 பெண் தொழில்முனைவோர் இத்திட்டத்தால் பயனடைந்தனர். மேலும் நாடு முழுவதும் 42.84 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கப்பட்டது.

“பேராக் மாநிலம் அதிகபட்ச பங்கேற்பைப் பெற்றது. அங்கு 1,863 பெண்கள் ரிம14.35 மில்லியன் பெற்றனர்; அடுத்ததாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் மாநிலங்களில் 1,840 பெண்கள் ரிம11.33 மில்லியன் பெற்றனர். மற்ற முக்கிய பங்கேற்பு கொண்ட மாநிலங்களாக நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா (787 பயனாளர்கள், ரிம6.05 மில்லியன்), பாகாங் (650 பயனாளர்கள், ரிம4.50 மில்லியன்), கெடா (543 பயனாளர்கள், ரிம3.60 மில்லியன்), மற்றும் ஜோகூர் (348 பயனாளர்கள், ரிம1.75 மில்லியன்) ஆகும்.


“அதேவேளையில், பினாங்கு மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் 179 பெண்கள் ரிம1.01 மில்லியன் பெற்றனர், சபாவில் 26 பயனாளர்கள் ரிம132,000 பெற்றனர். குறைந்தபட்ச பங்கேற்பாக சரவாக் (11 பயனாளர்கள், ரிம54,000), திரங்கானுவிக் (6 பயனாளர்கள், ரிம46,000), மற்றும் கிளந்தானில் (6 பயனாளர்கள், ரிம18,000) என ஒவ்வொரு மாநிலங்களிலும் புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளது.” என்றார்.

PENN 2.0 இன் முன்னேற்றம்

மேலும், இவ்வாண்டில் தற்போதைய நிலவரப்படி வழங்கப்பட்டுள்ள நிதி குறித்து முகமது ஷமீர் அப்துல் அசீஸ் தெரிவித்ததாவது, “PENN 2.0 (ஜூன் 2025 – ஜூன் 2026) திட்டத்தின் கீழ் 2025 செப்டம்பர் மாதம் வரை ஏற்கனவே 1,884 பெண் தொழில் முனைவோர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் மொத்தம் ரிம12.60 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

“பேராக் மீண்டும் முன்னிலையில் இருந்து, 572 பயனாளர்கள் ரிம4.22 மில்லியன் பெற்றனர். அடுத்து சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் மாநிலங்களில் 474 பெண்கள் ரிம3.02 மில்லியன் பெற்றனர். மற்ற பகுதிகளில் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா (275 பயனாளர்கள், ரிம1.93 மில்லியன்), பகாங் மாநிலத்தில் (175 பயனாளர்கள், ரிம1.19 மில்லியன்), கெடா (140 பயனாளர்கள், ரிம932,000), ஜோகூர் (126 பயனாளர்கள், ரிம626,000) ஆகியவை அடங்கும். பினாங்கு மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் 87 பெண்கள் ரிம466,000 பெற்றனர், சிறிய மாநிலங்களான திரங்கானுவில் (7 பயனாளர்கள், ரிம85,000), சபா (11 பயனாளர்கள், ரிம79,000), கிளந்தானில் (13 பயனாளர்கள், ரிம36,000), மற்றும் சரவாக் (4 பயனாளர்கள், ரிம17,000) ஆகியவை குறைந்த பங்கேற்பைப் பெற்றன.” என்றார்.

ஒட்டுமொத்த சாதனைகள்

“கடந்த 2024 ஏப்ரல் முதல் PENN திட்டத்தின் கீழ் மொத்தம் 7,074 பெண் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் முதல் முறையாகத் தங்கள் சொந்த வணிகங்களைத் தொடங்கியுள்ளனர். இது நிதி உதவியை மட்டும் அல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் பெண்களை வலுப்படுத்த மடானி அரசாங்கம் காட்டும் உறுதியையும் பிரதிபலிக்கிறது” என்று முகமது ஷமீர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

PENN திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள்

PENN திட்டம் முழுமையாக அணுகக்கூடியதாகவும், பாரபட்சமின்றி பயனளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எந்த அடமானமும், உத்தரவாதமுமோ, நிதி அறிக்கைகளோ தேவையில்லை. இதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் இந்தியப் பெண்கள் தடையில்லாமல் பங்கேற்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள 117 அமானா இக்தியார் கிளைகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் முகமது ஷமீர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் விளக்கமளிக்கையில், “பயனாளர்கள் தொடர்ந்து வழிகாட்டல், பயிற்சி மற்றும் கண்காணிப்பு மூலம் தங்கள் வணிக வளர்ச்சிக்கு ஆதரவு பெறுகின்றனர். கடன் பெறும் பெண்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதில் உடனடி குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்படமாட்டார்கள். இந்தக் குழு முறை கடன் திருப்பிச் செலுத்தலில் ஒழுக்கத்தை உருவாக்குவதோடு சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது.

“இத்திட்டத்தினால் பெண்கள் அடைந்துள்ள பயன்களின் மூலம் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களது வெற்றிக் கதைகளை ஊடகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரேமா ராஜூ, அனுராதா முனியன், சாந்தி ஆனந்தன் போன்ற பெண்கள் PENN பத்திரிக்கை வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் கதைகள், தங்களது வாழ்க்கையை மாற்றியமைத்து, தங்களது குடும்பங்களைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்த உண்மையான உதாரணங்களாகத் திகழ்கின்றன” என்றும் முகமது ஷமீர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஆதரவு எதிர்கால நோக்கம்

அமானா இக்தியார் மலேசியாவின் நிதி ஒதுக்கீடுகளைப் பற்றி பேசிய டத்தோ முகமது ஷமீர் அப்துல் அசீஸ், “2011 முதல் அமானா இக்தியார், தனிப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பெறவில்லை. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமை ஏற்றது முதல், அமானா இக்தியார் முதலில் ரிம10 மில்லியன் பெற்றது. பின்னர் தேசிய பட்ஜெட்டில் ரிம100 மில்லியன் பெற்றது. 2026-ல் இதே முறை தொடரும். ஆண்டுதோறும் கூடுதலாக ரிம50 மில்லியன் ஒதுக்கப்படும். மேலும் மத்திய ஆண்டில் மதிப்பீடு செய்யப்படும்.

“இந்த நிதி ஒதுக்கீடு பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்த அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது, இதன் மூலம் PENN போன்ற திட்டங்கள் மலேசியா முழுவதும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தத் தொடரும்.

“PENN 2.0 இந்திய சமூகத்தை மையப்படுத்தியிருந்தாலும், கடன் பெறுபவர்கள் அமானா இக்தியாரின் ரிம2.6 பில்லியன் நிதியையும் பயன்படுத்தலாம். இது அனைத்து சமூகங்களுக்கும் ஏற்றது. இந்தத் திட்டம் பெண்களுக்கு தொழில்முனைவுத் திறன், நிதி சுயநிலைமை மற்றும் நீண்டகால சமூக மாற்றத்தை அடைய வலுவூட்டுகிறது. இது நம்பிக்கை, வலிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஊக்கியாகச் செயல்படுகிறது.” என்று கூறினார்.

வெற்றிக் கதைகள்

PENN 2.0-வின் சாதனையானது மலேசியா முழுவதும் இதன் மூலம் பயனடைந்துள்ள இந்திய பெண் தொழில் முனைவோரின் முன்னேற்றத்திற்குச் சான்றாக உள்ளது.

அனுராதா முனியன் - MIVA FASTMART, SEMENYIH உரிமையாளர்

செமினி பகுதியைச் சேர்ந்த தொழில் முனைவோரான அனுராதா முனியன் தனது அனுபவத்தை நமது திசைகள் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.

“நான் 2016-ல் Miva Fastmart என்ற சிறிய சில்லறை கடையைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவசியமானப் பொருட்களை மட்டுமே வைத்திருந்தேன். டத்தோ ரமணன் அவர்கள், தொலைக்காட்சியில் PENN பற்றி பேசும் போது, இந்த நிதி குறித்து அறிந்து விண்ணப்பித்தேன்.

“இதன் மூலம் என் வணிகத்தை விரிவுபடுத்தி, ஒரு பணியாளரை நியமித்து, புதிய பொருட்களைச் சேர்த்து விற்பனையை உயர்த்த முடிந்தது. அடமானம் தேவையில்லை, செயல்முறை எளிமையாக இருந்தது. அமானா நிர்வாகிகள் வழங்கிய வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது. என்னைப் போன்ற பெண் தொழில்முனைவோருக்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.

சாந்தி ஆனந்தன் – MYKRIZ BARBER SHOP, KUALA SELANGOR உரிமையாளர்

மற்றொரு வெற்றியடைந்த தொழில் முனைவோரான சாந்தி ஆனந்தன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது:

“இது எனக்கு முதல் தடவையோ இரண்டாவது தடவையோ அல்ல — இதுவரை நான்கு முறை கடன்களைப் பெற்றுள்ளேன். ஆரம்பத்தில் அவர்கள் எனக்கு ரிம10,000 முதல் ரிம15,000 வரை வழங்கினர். இப்போது ரிம20,000 பெற்றுள்ளேன்.

“நான் முடிதிருத்தும் கடையைத் தொடங்கிய போது PENN திட்டம் எனக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. இதன் மூலம் என் வணிகத்தை வளர்த்தும் விரிவுபடுத்தியும் கொள்ள முடிந்தது. வணிகத்தில் போட்டிகள் இருந்தாலும், YB எனக்கு மிகப் பெரிய வாய்ப்பை அளித்தார்.

“நான் தொடங்கிய காலத்திலிருந்து என் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இன்று நான் என் வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வணிகமும் சிறப்பாக உள்ளது. அனைத்து இந்தியப் பெண்களும் இந்த நிதியை நன்கு பயன்படுத்துங்கள் என்று கூற விரும்புகிறேன். YB எங்களுக்காக மிகவும் உதவி செய்துள்ளார் — நீங்கள் இதை பயன்படுத்தும் போது தான் இதன் பயனை உணர்வீர்கள். இந்த திட்டம் எனது கடையைப் புதுப்பிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கவும் உதவியது.” என்றார்.

பிரேமா ராஜூ – MOORTHY FLOUR MILL, RAWANG உரிமையாளர்

பிரேமா ராஜூ தனது மசாலா மற்றும் மாவு வணிக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது:

“பல நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு எனது தயாரிப்புப் பொருட்களை வழங்குமாறு கூறுகின்றனர். ஒரு சிலரோ தினமும் ஆயிரம் ரிங்கிட் கொடுத்து, மாதந்தோறும் மசாலா பொருட்களை வாங்க முன்வந்தார்கள். மற்றொரு நிறுவனம் பூஜை பொருட்களைத் தயாரிக்குமாறு கூறியது.

“சில வாடிக்கையாளர்கள் தங்களுடைய ரெசிப்பிகளைத் தந்து அதன்படி நான் தயார் செய்தேன். இதன் மூலம் எனக்கு வருமானம் கிடைத்தது. மேலும் தயாரிப்புகளைச் சேமித்து நிர்வகித்ததற்காக நல்ல இலாபம் கிடைத்தது.

“நான் அரிசி மாவு, இடியாப்பம் மாவு போன்றவற்றையும் பல கடைகள் மற்றும் உணவகங்களுக்கு அரைத்துத் தருகிறேன். சீன வியாபாரிகளும் என்னிடம் ஆர்டர்கள் தருகின்றார்கள். அதையும் தயாரித்துக் கொடுக்கிறேன். இந்த கடன் உதவி எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.

“இயந்திரம் பழுதடைந்த போதிலும், நான் வேலையைத் தொடர முடிந்தது. இந்த பெண்கள் திட்டத்தின் மூலம் நான் மதிப்பும் நம்பிக்கையும் சுயநிறைவும் பெற்றேன். இப்போது என் மகனையும் வணிகத்தில் இணைத்துள்ளேன், என் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

“இது முன்னேற்றமான முயற்சி. டத்தோ ரமணன், பெண்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்துள்ளார். மடானி மலேசியாவிற்கு நன்றி. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் வளர்ச்சியடைய எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. டத்தோவிற்கு இதற்காக மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.” என்றார்.

இக்கதைகள் மற்றும் பிற பயனாளர்களின் அனுபவங்கள், PENN திட்டம் இந்தியப் பெண்களை வலுப்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகங்களை வலுப்படுத்தும் சக்தி வாய்ந்த மாற்றமாக விளங்குவதை வெளிப்படுத்துகின்றன.

Related News