கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
கடந்த 68 ஆண்டு காலமாகக் கட்டிக் காக்கப்பட்டு வரும் மலேசியாவின் வெற்றியானது, நாட்டின் தலைமைத்துவத்தை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக மக்களின் அளப்பரிய பங்களிப்பு, விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை உணர்வையும் சார்ந்துள்ளது என்று கூட்டரசு பிரதேச ரேலா கிளப்பின் கெளரவ இணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் கே.கே. சாய் வலியுறுத்தினார்.
நாட்டின் மேம்பாட்டிற்கு தேசியத் தலைமைத்துவம் உண்மையிலேயே மிக முக்கியமானது. ஆனால் மக்களின் ஒற்றுமை உணர்வுதான் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிச் செய்யக்கூடிய அடிப்படையாகும் என்று அவர் வலியுறுத்தினார். "மக்களின் ஒற்றுமையால் மட்டுமே, நாடு தொடர்ந்து மேன்னையுடன் முன்னேற முடியும்" என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் கே.கே. சாய் கூறினார்.

சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் 1957 ஆம் ஆண்டில் "மெர்டேக்கா" என்று முழக்கமிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மெர்டேக்கா அரங்கிற்கும், உலகின் இரண்டாவது உயரமான கோபுரமான மெர்டேகா 118 க்கும் ரேலா கிளப் பொறுப்பாளர்கள் சிறப்பு வருகை புரிந்த போது டத்தோ ஶ்ரீ டாக்டர் கே.கே. சாய் இவ்வாறு கூறினார்.
ரேலா பொறுப்பாளர்களின் இந்த வருகையை , பிஎன்பி மெர்டேக்கா வெஞ்சர்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி யாங் மூலியா தெங்கு டத்தோ அப்துல் அஸிஸ் எதிர்கொண்டு வரவேற்றார். அவர் மெர்டேகா 118 கோபுர கட்டுமானத்தின் எழுச்சியூட்டும் கதையையும், வரலாற்றையும் ரேலா பொறுப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கிளப் ஆலோசகர் டத்தோ ஶ்ரீ மைக்கல் சோங் உட்பட கூட்டரசு பிரதேச ரேலா கிளப்பின் கெளரவச் செயற்குழு உறுப்பினர்கள் இந்த வருகையில் பங்கு கொண்டனர். இந்த வருகை உண்மையிலேயே ஓர் அர்த்தம் பொதித்ததாகும். இன்று நாம் அனுபவிக்கும் நாட்டின் சுதந்திரம், முன்னேற்றம், நல்லிணக்கம் மற்றும் செழிப்பு எவ்வளவு விலை மதிப்பற்றது என்பதை நினைவூட்டுகிறது.
சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் சுதந்திர தினச் செய்தியை நினைவு கூர்ந்த டத்தோ ஶ்ரீ டாக்டர் கே.கே. சாய், நாம் அனைவரும் மலேசியர்கள். இதுவே நம்மை ஒன்றிணைக்கும் பிணைப்பு. மலேசியர்கள் என்ற முறையில் ஒரு தேசமாக விளங்கிட ஒற்றுமையே நமது அடிப்படை பலமாகும் என்றார்.

டத்தோ ஶ்ரீ கே.கே.சாயைப் பொருத்தவரை இந்தச் செய்தி இன்றைக்கும் பொருத்தக்கூடியதாகும். ஏனெனில், மலேசியாவில் இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மை ஒரு தடையாக இல்லை, மாறாக வலுவான மற்றும் இணக்கமான எதிர்காலத்தை நோக்கி நம்மை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகும்.