அம்பாங், ஜனவரி.18-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அளவிலான 'தைப்பொங்கல் தமிழர் திருவிழா' நேற்று சனிக்கிழமை அம்பாங், டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ. பாப்பாராய்டு தலைமையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, அம்பாங் ஜெயா, கம்போங் தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா தொடங்கியது. ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு முன்னிலையில், புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில், அம்பாங், டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் அதிகாரப்பூர்வ விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்.

மந்திரி பெசாருடன் இணைந்து லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையிட் அஹ்மாட் சையிட் அப்துல் ரஹ்மான் அல்ஹாடாட், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் புவான் ஹாஜா ரோட்ஸியா பிந்தி இஸ்மாயில் உட்பட மாநில மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாகப் பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் முறையில் அரங்கேற்றப்பட்டன.

சிலாங்கூர் மாநிலத்தின் பன்முகத்தன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும் பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் விழா அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, காலையில் ஆலயத்தில் பொங்கலிடப்பட்டு, பல்வேறு இந்தியர்களின் பாரிம்பரிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு, மாலையில் மண்டபத்தில் பல சிறப்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, மக்களுக்கு விருந்து உபசரிப்பு வழங்கிய சிலாங்கூர் அரசு ஆதரவிலான இந்த பொங்கல் விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டுவிற்கு தமது பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியச் சமூகத்தை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு தொடர்ச்சியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் எவரும் கைவிடப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதோடு, சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொரு பிள்ளையும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றார்.

இந்த 2026-ஆம் ஆண்டில், இந்தியச் சமூகத்திற்கான திட்டங்களை விரிவுபடுத்தவும் அதன் மூலம் அதிகமானோர் பயனடைவதை உறுதிச் செய்யவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று கூறி, அவற்றை தமது உரையில் மந்திரி பெசார் பட்டியலிட்டார்.

பிற இனத்தவர்களின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது என்பதற்கு இந்த பொங்கல் விழா சான்று என்று மந்திரி பெசார் தமது உரையில் பெருமிதம் தெரிவித்தார்.

இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய நிகழ்வின் ஏற்பாட்டுக்குத் தலைவரான பாப்பாராய்டு, இந்த மாபெரும் பொங்கல் விழாவிற்கு மகத்தான் ஆதரவு நல்கிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஶ்ரீ அமிருடின் ஷாரிக்கு தமது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இது போன்ற ஒற்றுமை விழா திட்டங்கள் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இதன் மூலம் இந்தியச் சமூகம் மட்டுமன்றி, அனைத்து இன மக்களும் இத்திட்டங்களின் பலன்களையும், இந்த விழாக்களின் வாயிலாக முன்னெடுக்கப்படும் ஒற்றுமை உணர்வையும் பெற்றிட முடியும் என்று பாப்பாராய்டு தமது உரையில் தெரிவித்தார்.

கலைவிழா மற்றும் விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்த மாபெரும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளை முறையாக செய்த ஏற்பாட்டு குழுவினருக்கு பாப்பாராய்டு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








