பகான், அக்டோபர்.01-
பினாங்கு பகான் தொகுதியில் கடந்த செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் இரு தினங்களுக்கு இந்தியர் கேளிக்கை விழா 2025 வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பகான் தொகுதியில் இந்தியர்களுக்கென்று தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்த ஒரு விழா நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் பகான் இந்தியர் கேளிக்கை விழாவை அறிமுகப்படுத்தியதாக பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பினாங்கில் இந்தியர்களுக்கான நடத்தப்படும் பெரு விழாவான பகான் இந்தியர் கேளிக்கை விழா, இந்த ஆண்டும் இரண்டு தினங்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இரண்டு தினங்களும் இந்தியர்களின் தற்காப்பு கலையான சிலம்பம், பரத நாட்டியம், தேக்வாண்டோ, அதிர்ஷ்ட குலுக்கல், சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, பாரம்பரிய ஆடைகளில் பவனி வரும் போட்டி, பாடல், இசை நாட்டியம் என கலை நிகழ்ச்சி, இந்தியர்களின் பாரம்பரிய உணவு சந்தை, சிறார்களுக்கான பாடல் திறன் போட்டி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பகான் தொகுதியே விழாக் கோலம் பூண்டது. தொகுதியில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின சமூகமும், இந்த கேளிக்கை விழாவில் கலந்து கொண்டது மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.

தீபாவளி திருநாள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் வசதிகுறைந்த B40 குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் முதல் நாளன்று பகான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் குமரன் கிருஷ்ணன் 30 பேருக்கு உணவுக் கூடைகளை அன்பளிப்பாக வழங்கினார். மறுநாள் 100 பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவை நடத்துவதற்கு தமக்கு தொடர்ந்து பெரும் துணையாக இருக்கும் லிம் குவாங் இம்முறை பத்தாயிரம் ரிங்கிட் நன்கொடையாக வழங்கினார். பட்டர்வொர்த்தில் உள்ள சமூக நல அமைப்புக்கு பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கியதாக குமரன் குறிப்பிட்டார்.

செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், கட்டாரில் நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக பொது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அன்பளிப்பு வழங்கினார்.

பகான் இந்தியர் கேளிக்கை விழா, வெறும் பொழுது போக்கு விழா மட்டுமல்ல. பலர் தங்கள் திறனை வெளிப்படுத்தத் தளம், ஏற்படுத்தப்பட்டதுடன் பலர் வர்த்தகம் செய்வதற்குரிய வாய்ப்பும் வழங்கப்பட்டதாக குமரன் குறிப்பிட்டார்.