திசைகளின் தலையங்கம்
2026-ஆம் கல்வியாண்டு மலேசிய இந்தியர்களுக்கு ஒரு கசப்பான உண்மையைப் பறைசாற்றியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருவாரியாகச் சரிந்துள்ளதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காலங்காலமாகத் தமிழ்ப்பள்ளிகளின் உயிர்நாடியாகத் திகழ்ந்த மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வு, எதிர்காலத் தமிழ்மொழி மற்றும் சமூகத்தின் நிலை குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.
நீண்ட காலமாகவே, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரம் என்ற அளவில் சீராக நிலைநிறுத்தப்பட்டு வந்தது. முன்பு நடைமுறையிலிருந்த ஆறாம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வான யு.பி.எஸ்.ஆர் (UPSR) தேர்வில் அமரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துல்லியமாக மதிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்த எண்ணிக்கைக் குறைவு என்பது வெறும் எண்கள் சார்ந்த விவகாரம் அல்ல. இது நமது சமூகத்தின் எதிர்காலக் கல்வித் திசையோடு தொடர்புடையது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பதிலாக தேசியப் பள்ளிகளுக்கோ அல்லது பிற மொழிப் பள்ளிகளுக்கோ குறிப்பாகச் சீனப்பள்ளிகள் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளுக்கு மாற்றும் முடிவை எடுத்திருக்கிறார்களா என்ற கேள்வி வலுவாக எழுகிறது. அவ்வாறு இருந்தால், தமிழ்ப்பள்ளிகளின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை ஏன் குறைகிறது என்பது ஆய்வுக்குரியது.
மறுபுறம், மலேசிய இந்தியர்களின் பிறப்பு விகிதம் அண்மைக் காலமாகச் சரிந்து வருவதையும் நாம் புறக்கணித்து விட முடியாது. நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கை முறையினால் இந்தியக் குடும்பங்களின் அளவு சுருங்கி வருவது, தற்போது பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எதிரொலிக்கிறதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. பிறப்பு விகிதச் சரிவா அல்லது பள்ளித் தேர்விலான மாற்றமா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆண்டுதோறும் வெறும் அறிக்கைகளையும் புகார்களையும் மட்டும் முன்வைத்து விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வரும் வேளையிலும், கற்பித்தல் முறைகளில் நவீனம் புகுத்தப்பட்ட பிறகும் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்குவது ஏதோ ஒரு அடிப்படைச் சிக்கலைச் சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து வெறும் யூகங்களை நம்பியிருக்காமல், அறிவியல் ரீதியான தரவுகளைச் சேகரிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, கல்வியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ் அறவாரியம் (Tamil Foundation) போன்ற முக்கியத் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநில வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு, மாணவர் எண்ணிக்கைச் சரிவுக்கான உண்மையான காரணங்களை இந்த அமைப்புகள் கண்டறிய வேண்டும். பெற்றோர்களின் மனநிலை மாற்றம் மற்றும் பிறப்பு விகிதத்தின் தாக்கம் குறித்துத் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆய்வின் முடிவுகள் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக முக்கியமானதாக அமையும். மாணவர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளை எவ்வாறு வலுப்படுத்துவது, பெற்றோர்களிடையே தமிழ்ப்பள்ளி குறித்த விழிப்புணர்வை எப்படி மேம்படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய இவ்வாய்வு ஓர் அடித்தளமாக அமையும். வெறும் உணர்ச்சிவசப்பட்ட கோஷங்களை விட, தெளிவான தரவுகளே நமது பள்ளிகளைக் காப்பதற்கான ஆயுதங்களாக மாறும்.
காலம் கடந்து செல்வதற்கு முன், நமது சமூகத்தின் கல்வி நலனில் அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 2026-ஆம் கல்வியாண்டில் நமக்கு ஏற்பட்ட தொய்வு நிலை என்ற இந்தப் பாடம், வரும் ஆண்டுகளில் திருத்தப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் வகுப்பறைகள் மீண்டும் மாணவர்களின் குரல்களால் நிரம்ப வேண்டுமெனில், அதற்குரிய தீர்வை நாம் இன்றே கண்டறிய வேண்டும்.








