கோலாலம்பூர், அக்டோபர்.13-
பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று மாலை, பி40 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு, டிஎஸ்கே குழுமத்தின் நிறுவனர் டத்தோ ந. சிவகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பின்தங்கிய மாணவர்களுக்கு சமூக அக்கறையுடன், தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பத்துமலை, தாமான் மெலாவத்தி, ஆர்ஆர்ஐ, எஃப்ஃபிங்கம், அம்பாங், கம்போங் பண்டான், பிஜேஎஸ் 1, தம்புசாமி பிள்ளை ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று பிற்பகல், 3 மணியளவில் பத்துமலை “பில்போர்ட்” பகுதியில் திரண்ட மாணவர்கள், வில்லா குகை, ராமாயண குகை மற்றும் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றிற்கு கலாச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
அதன் பின்னர், மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த எஸ்கேப் ரூம், ஜங்கல் கோம்போ, ரோடோ புல் ரைட், ஃபேஸ் & போடி பெயிண்டிங் மற்றும் மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர்.
மாலை 6.00 மணியளவில் உணவு மற்றும் பரிசு வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ந. சிவகுமார், “மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி. தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை மட்டுமல்ல, இதயங்களை ஒளியூட்டும் தருணமுமாகும்,” என்று தெரிவித்தார்.
வரும் காலங்களில் இது போன்ற முயற்சிகள் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று சிவகுமார் கூறினார். டிஎஸ்கே சமூக நல அமைப்பின் அனைத்து முயற்சிகளுக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் அதன் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் முழு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இவ்வேளையில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் என்று டத்தோ சிவகுமார் கூறினார்.