ஜார்ஜ்டவுன், அக்டோபர்.08-
வறுமையின் பிடியில் சிக்கி, பரிதவிக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை இந்தியக் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவியளிப்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பினாங்கு இந்து இயக்கம், எதிர்வரும் தீபஒளித்திருநாள் தொடர்பில், அத்தகு நிலையிலுள்ள சுமார் 150 குடும்பங்களுக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை, இங்கு ஏற்பாடு செய்திருந்த அவ்வியக்கத்தின் அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சியின் வாயிலாக அளித்து, தனது சேவை மனப்பான்மையைச் செவ்வனே நிரூபித்திருக்கிறது.

அத்தகைய குடும்பங்களை வாட்டி வதைக்கும் வறுமையும் இயலாமையும், அவர்களை சொல்லொணாத் துயரில் மூழ்கடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாமலும், அவ்வாறே அனுப்பினாலும், அவர்களின் தேவைகளை ஈடேற்றுவதற்கு அல்லலாடுகின்ற சிலப் பெற்றோர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது என்று, இந்நிகழ்ச்சியில் தொடக்கவுரை
ஆற்றுகையில், அவ்வியக்கத் தலைவர் டத்தோ பி.முருகையா கூறினார்.

இவ்வாறான ஏழைக் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தவிரவும் சிலக் குடும்பங்களில் பெற்றோர்கள் சிலர் உடல் ரீதியாக பாதிப்படைந்தும், அங்கவீனர்களாகவும் இருப்பது துயரமானது என்று குறிப்பிட்ட அவர், போதிய வருவாய் இன்றி குடும்பங்கள் சிலவற்றில் குழந்தைகள் போதிய உணவின்றி பட்டினியாக, காலம் கழிக்க வேண்டிய் கொடுமையும் நிகழந்து வருவதைத் தாம் நன்கு அறிவதாகவும், இவற்றுக்கெல்லாம் பெருஞ்சுமையாக குடியிருக்கும் இல்ல வாடகையையும் செலுத்த இயலாத துயரமும் உடன் சூழ்வது, வேதனையின் உச்சமென்றும் விவரித்தார்.

இதுபோன்ற ஏழைக் குடும்பங்கள் அரசின் கீழ் இயங்கும் சமூக நல உதவிகளுக்கும் வழியில்லாமல், பிள்ளைகளைப்
பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க பள்ளிப் பேருந்து கட்டணங்களுக்கும் ஆதரவின்றி திண்டாடிடும் நிலைமை
வருந்தத்தக்கதென்றும் தெரிவித்த அவர், உதாரணமாக, 4 குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதாந்திர வருமானம்
ரி.ம 1,700 என்ற நிலையில், பேருந்துக் கட்டணம் இவர்களுக்கு எட்டா கனி என்றும் கூறியதோடு, இந்நிலையில், பிள்ளைகளின் இதரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள இயலாது புழுங்கித் துடிப்பதும் கவலையளிக்கக்கூடியதென்று சபையில் எடுத்துரைத்தார்.

மலிவு விலையிலான வீடுகள் கிட்டுவதற்கு வகை செய்யப்பட வேண்டுமென்று, இந்நிகழ்ச்சிக்கு சிறப்புப் பிரமுகர்களாக
வருகையளித்திருந்த மாநிலத் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்
கர்ப்பால், ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ ஶ்ரீ சுந்தரராஜூ சோமு மற்றும் லிம் சுவி கிம், மாநில மாநகர்
மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தனது கோரிக்கையை முன் வைத்த முருகையா, இத்தகையோருக்கு புதிய வீடிமைப்புத் திட்டங்களில் போதிய வீடுகளை நிர்மாணிக்க அரசினர் நல்லிணக்கம் காண
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு தீப ஒளித் திருநாளில் இத்தகைய வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அரிசி, சீனி, பருப்பு, சமையல் எண்ணெய், மைலோ, பிஸ்கட் வகைகள், மசாலை வகைகள் போன்ற சுமார் 35 விதமான பொருள்கள் அடங்கியப்
பையுடன் 50 ரிங்கிட் பணமுடிப்பும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக, முருகையா மேலும் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய ஜெகதீப் சிங் டியோ, கடந்த 26 ஆண்டுகளாக ஏழைக் குடும்பங்களுக்கு அன்பளிப்புப்
பொருள்களை வழங்கி வரும் பினாங்கு இந்து இயக்கத்தின் நற்சேவையை வெகுவாகப் புகழ்ந்ததோடு, இவ்வியக்கத்திற்கு
தனது பங்களிப்பாக 10,000 ரிங்கிட் வழங்குவதாக உறுதி கூறினார்.








