Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தான் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மடானி அரசாங்கத்தின் பெரும் முன்னெடுப்பு!
சிறப்பு செய்திகள்

தெலுக் இந்தான் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மடானி அரசாங்கத்தின் பெரும் முன்னெடுப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

மடானி அரசின் 2025 ஆம் ஆண்டு கல்வி மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தெலுக் இந்தான் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் 1.48 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைத்துப் பின்னணியிலும், இடங்களிலும் உள்ள மாணவர்கள் கல்வியில் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யும் அரசின் உறுதியைக் காட்டுகிறது.

மொத்த ஒதுக்கீட்டில் — 11 தமிழ் பள்ளிகளுக்கு 1,230,000 ரிங்கிட்டும், 258 மாணவர்களுக்கு 256,600 ரிங்கிட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வீட்டு வசதி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அமைச்சர் ங்கா கோர் மிங், கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் மடானி அரசின் தேசிய பார்வையுடன் இதை இணைத்துச் செயல்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 12 முதல், அமைச்சகப் பிரதிநிதிகள் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும் சென்று நிதி ஒதுக்கீட்டுக்கான “மாதிரி காசோலைகளை” வழங்கினர். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிச் செய்யும் வகையில், நிதி நேரடியாக பள்ளிகளின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், பத்தாக் ராபிட் எஸ்டேட் தமிழ் பள்ளி 150,000 ரிங்கிட் பெற்றுள்ளது. அதன் தலைமை ஆசிரியர் திருச்செல்வன் சந்திரசேகரன் கூறுகையில், இந்நிதி பள்ளி வசதிகளை மேம்படுத்தவும், கற்றல் சூழலை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.


நோவா ஸ்கோஷியா பிரிவு 1 எஸ்டேட் தமிழ் பள்ளி 100,000 ரிங்கிட் பெற்றுள்ளது. இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோகிலவாணி குமாரசாமி கூறுகையில், நீண்ட காலமாகக் காத்திருந்த பழுது பார்ப்புப் பணிக்காக இதை பயன்படுத்தப் போவதாகக் கூறினார்.

அதே வேளையில், நோவா ஸ்கோஷியா பிரிவு 2 எஸ்டேட் தமிழ் பள்ளிக்கு 120,000 ரிங்கிட் வழங்கப்பட்டு, அது வகுப்பறை மேம்பாடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

உலு பெர்ணாம் 2 எஸ்டேட் தமிழ் பள்ளி மற்றும் சுங்கை சாமாக் எஸ்டேட் தமிழ்ப்பள்ளி தலா 35,000 ரிங்கிட் பெற்றுள்ளன. கிராமப்புற பகுதிகளில் இருந்தாலும், இவ்விரு பள்ளிகளும் நிதியளிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அரசின் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.

உலு பெர்ணாம் 2 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. ரமேஷ் கூறுகையில், “இந்நிதி வகுப்பறை கூரை பழுதுபார்ப்பு மற்றும் பழைய மின்கம்பிகளை மாற்ற உதவும்,” என்றார்.

நடேசன் பிள்ளை தமிழ்ப்பள்ளி 120,000 ரிங்கிட் பெற்றுள்ளது. அதன் தலைமை ஆசிரியர் ஜி. கணேசன் கூறுகையில், இது பள்ளி வளர்ச்சியை வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

மொத்தம் 7 மாணவர்கள் கொண்ட டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கு 70,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. இதை “மிகுந்த ஊக்கமாக” வர்ணித்த தலைமை ஆசிரியர் விமலா பாலன், புதிய கற்றல் பொருட்கள் மற்றும் வகுப்பறை உபகரணங்களை வாங்க இதைப் பயன்படுத்தப் போவதாகக் கூறினார்.

சசெக்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு 100,000 ரிங்கிட் வழங்கப்பட்டு, அது கல்வி உபகரணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என தலைமை ஆசிரியர் குமாரன் பெருமாள் தெரிவித்தார். இதனுடன் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளிக்கும் தலா 138,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. செலாபாக் எஸ்டேட் தமிழ்ப்பள்ளிக்கு 110,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முருகன் கூறுகையில், இந்த நிதி பள்ளி மண்டப மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். செலாபாக் எஸ்டேட் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா கூறுகையில், வகுப்பறை அமைப்புகளை மேம்படுத்த இதுவே பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார். திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் கூறுகையில், நீண்ட நாட்களாக இருந்த தேள்கள் பிரச்சனை இதன் மூலம் தீர்க்கப்படும் என்றார். இன்னும், பி40 குடும்பங்களிலிருந்து வந்த 258 மாணவர்களுக்கும் மொத்தம் 256,600 ரிங்கிட் கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தலா 1,000 ரிங்கிட்டும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,200 ரிங்கிட்டும் பல்கலைக்கழக மாணவர்கள் 2,000 ரிங்கிட்டும் பெற்றுள்ளனர்.

இந்த முயற்சி மடானி ரொக்கம் உதவித் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து மாணவர்களும் பொருளாதாரப் பின்னணி காரணமாக கல்வியை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகாமல் இருக்க அரசின் நோக்கம் இதன் மூலம் நிறைவேறுகிறது. ஒவ்வொரு ரிங்கிட்டும் வெளிப்படையாகவும், பொறுப்புடன் பயன்படுத்தப்படுகிறது. இதுவே மடானி அரசின் உள்ளடக்கிய ஆட்சி வாக்குறுதி வெறும் சொற்களல்ல, செயலில் நிறைவேற்றப்படும் உறுதியான சான்றாகும்.

Related News