Jan 9, 2026
Thisaigal NewsYouTube
100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் -  தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!
சிறப்பு செய்திகள்

100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் - தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!

Share:

ஷா ஆலாம், ஜனவரி.09-

பத்துமலை திருத்தலத்தின் நகரும் மின்படிக்கட்டுத் திட்ட விவகாரத்தில் ஒரு நூறு ஆண்டு காலப் பழைய சட்டத்தை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு அழாதீர்கள் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"காலம் மாறிவிட்டது, சட்டத் தேவைகள் மாறிவிட்டன; ஆனால் தேவஸ்தானம் மட்டும் இன்னும் ஒரு நூற்றாண்டு காலப் பழைய சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிப்பதா?" என பாப்பாராய்டு காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பாப்பாராய்டுவின் இந்த வாதம், வலைவாசிகள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன. பாப்பாராய்டுவின் உரையில், தேவஸ்தானத்தின் நிர்வாக நடைமுறைகளில் நிலவும் தேக்க நிலையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையையும் நவீனச் சட்ட விதிகளையும் வலியுறுத்துகிறது. இத்தகைய சூழலில், 100 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஒரு நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நாட்டின் நடப்புச் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறுப்பது முறையல்ல. இது நமது கோயில். மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது.

எனவே தேவஸ்தானம் வாதிடும் அந்த பழைய நீதிமன்ற தீர்ப்பு உத்தரவை, தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாப்பாராய்டு காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

ஒரு பொது அமைப்பாகத் தன்னை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் ஏன் தயங்குகிறது? தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்வதை விடுத்து, ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கமாகவோ அல்லது அறக்கட்டளையாகவோ தன்னை ஏன் முறைப்படுத்திக் கொள்ளவில்லை?, ROS கோரிக்கைக்கு ஏற்ப ஒரு சங்கத்தை நிறுவுவதில் தேவஸ்தானத்திற்கு அப்படியென்ன சிரமம் என்று பாப்பாராய்டு வினவினார்.

நாட்டின் நடப்புச் சட்ட விதிமுறைகளையும், பாதுகாப்புத் தரங்களையும் தேவஸ்தானம் பூர்த்தி செய்யத் தவறினால், பத்துமலையில் நகரும் மின்படிக்கட்டுத் திட்டத்திற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேவஸ்தானத்திற்கு இருந்தால், முதலில் சட்ட ரீதியான தடைகளை நீக்கி, சிலாங்கூர் அரசாங்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதே தம்முடன் அறிவுறுத்தலாகும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

தற்போது ஒரு மில்லியன் ரிங்கிட் கேட்டு தமக்கு எதிராக தேவஸ்தானம் தொடுத்துள்ள வழக்கு விசாரணையைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும், தேவஸ்தானத்தை நீதிமன்றத்தில் சந்திக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் பாப்பாராய்டு சவால் விடுத்துள்ளார்.

Related News