ஈப்போ, டிசம்பர்.01-
பேரா மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் குடியிருந்த இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான நிலப்பட்டா பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சில தோட்டங்கள் துண்டாடல் ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறிய இந்திய தோட்டப்பட்டாளிகள், அரசாங்க நிலங்களில் வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்த நிலையில் அவர்கள் நிலப்பட்டா பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அத்தகைய சிரமத்தை எதிர்நோக்கிய இந்தியக் குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டு விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 350 இந்தியக் குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டு விட்டதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
இன்று திங்கள் கிழமை பேரா, கோப்பெங், கோத்தாபாரு, மூன்றரை மைல் Kampung Tersusun பகுதியைச் சேர்ந்த 16 இந்திய குடும்பங்களுக்கு 5A என்ற நில உத்தரவாதப் பாரங்களை வழங்கும் நிகழ்வில் டத்தோ சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.
இந்த 16 இந்தியக் குடும்பங்கள் தோட்டங்களிலிருந்து வெளியேறிவர்கள் ஆவர். அருகில் உள்ள அரசாங்க நிலங்களில் சொந்தமாக வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
எனவே பேரா மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் குடியிருந்தவர்களின் நிலப்பட்டாப் பிரச்னைக்கு பெரும்பாலும் தீர்வு காணப்பட்டு விட்டது. இன்னும் நிலப்பட்டா கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றவர்களின் பிரச்னையானது முற்றிலும் மாறுப்பட்டது. அவர்கள் அரசாங்க நிலத்தில் குடியிருந்தவர்கள் அல்ல என்று டத்தோ சிவநேசன் தெளிவுப்படுத்தியதுடன் நிலப்பட்டா வழங்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையையும் விவரித்தார்.

தெலுக் இந்தான், கம்போங் காமாட்சி போன்ற பகுதிகளில் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கியுள்ள நிலப்பட்டா பிரச்னை முற்றிலும் மாறுப்பட்டது. அவர்கள் அரசாங்க நிலத்தில் குடியிருப்பவர்கள் அல்ல. மாறாக, தோட்ட துண்டாடல் ஏற்பட்ட போது, அங்குள்ள நிலத்தை விலைக்கு வாங்கி கூறுப்போட்டு, பத்து, இருபது பேர் வீடு கட்டிக் கொண்டவர்கள் ஆவர்.
அவர்கள் பிரச்னைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் பிரச்னையை வழக்கறிஞரை நியமித்து தீர்வு காண வேண்டுமே தவிர மாநில அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டக்கூடாது என்று டத்தோ சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
கோப்பெங், கோத்தாபாரு, மூன்றரை மைல் Kampung Tersusun , நிலப்பகுதியில் நில உத்தரவாத கடிதம் பெற்ற 16 பேரில் ஒருவரான R. ஹேமபிரசாந்த் கூறுகையில் தங்களின் 40 ஆண்டு காலப் பிரச்னைக்கு இப்போதுதான் தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மக்களின் நிலப் பிரச்னைக்கு தீர்வு கண்ட டத்தோ சிவநேசனுக்கு கிராமத் தலைவர் சுப்பிரமணியம் சிவராமன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தங்களின் நிலப்பகுதியில் கட்டப்படவிருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு மானியம் வழங்குவதற்கும் டத்தோ சிவநேசன் உறுதி கூறியிருப்பதாக சுப்பிரமணியம் தெரிவித்தார்.








