Jan 2, 2026
Thisaigal NewsYouTube
உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
சிறப்பு செய்திகள்

உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.02-

தோட்டத் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், இத்துறையில் உள்நாட்டுத் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் அதிகளவில் ஈடுபடச் செய்ய முடியும் என தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போது தோட்டத்துறையானது அந்நிய தொழிலாளர்களை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி விடும் நிலை ஏற்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இத்தொழில் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்ய இந்த ஓய்வூதிய முன்னெடுப்பானது மேற்கொள்ளப்படுவதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் தெரிவித்தார்.

ஓய்வூதியம் குறித்தப் பேச்சு வார்த்தைக்காக, தோட்டத் தொழிலாளர் சங்கம், விரைவில் மனித வளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் ராமகிருஷ்ணனையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில், இந்த முன்னெடுப்பானது உள்நாட்டு உற்பத்தியை மேலோங்கச் செய்ய வழி வகுக்கும் என்றும் டத்தோ ஜி.சங்கரன் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின், 24வது பேராளர் மாநாடு கடந்த வாரம் கோலாலம்பூர் பேல் ஹோட்டலில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில், 300 பேராளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்மாநாட்டில், இச்சங்கத்தில் ஓய்வு பெற்ற மேலவை உறுப்பினர்கள் 6 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனிடையே, இம்மாநாட்டில் பேசிய டத்தோ ஜி.சங்கரன், நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் தோட்டத் துறையில் வேலை செய்கின்றனர். அதில் செம்பனைப் பழ உற்பத்தி துறையில் 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டின் வருவாய் துறையில் செம்பனை முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதற்கு ஏற்றார் போல் தொழிலாளர்களைத் தயார் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்று தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் அமல்படுத்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கான எல்லாத் திட்டங்களையும் சங்கமானது கவனித்து வரும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் பணி ஓய்வு திட்டத்தையும் அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக் கொண்டார்.

Related News