ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.26-
பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. அந்த வகையில் சிரமத்தில் உழலும் மக்களை மேம்படுத்துவதற்கான மற்றொரு உன்னத முயற்சியாக, வி.வி.எஸ் சமூக நல அறவாரியத்தின் புரவலரான டாக்டர் சிவா, வி.வி.எஸ் சகோதரர்கள் அனைவருடன் இணைந்து ஆகஸ்ட் மாதத்திற்கான அதன் மாதாந்திரத் தொண்டுப் பணியை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த மாதாந்திர நடவடிக்கை, பினாங்கில் பௌண்டரி பாடாங் தெம்பாக் பகுதியைச் சுற்றியுள்ள 100 வறிய நபர்களுக்கு உவகையுடன் வழங்கப்பட்ட உணவு விநியோகத் திட்டத்தின் மூலம் அவர்களின் அகமும் முகமும் மலரச் செய்யப்பட்டது.

இந்த முயற்சியானது, மக்களுக்கு இரக்கத்துடன் சேவை செய்வதற்கான அறவாரியத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் ஒரு பகுதியாகும். தேவைப்படும் நேரத்தில் யாரும் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை இது உறுதிச் செய்கிறது.

இந்தச் சேவை, தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக கருணையின் உணர்வை வெளிப்படுத்தியது. அத்துடன் சமூக நலனின் உண்மையான சாரத்தைப் பிரதிபலிக்கச் செய்தது.

இது குறித்து டாக்டர் சிவா விவரிக்கையில், "உண்மையான மகத்துவம் என்பது செல்வத்திலோ அல்லது அதிகாரத்திலோ இல்லை. மாறாக, உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதில்தான் உள்ளது. வி.வி.எஸ் சமூக நலன் அறவாரியத்தின் தொடர்ச்சியான இந்த தொண்டு நடவடிக்கைகள் காலத்தால் அழியாத ஞானத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன. மனுகுலத்திற்குச் சேவை செய்வதுதான் உயர்ந்த பண்பு என்பதை நிரூபிக்கின்றது என்றார் டாக்டர் சிவா.