ஷா ஆலாம், அக்டோபர்.08-
ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகக் கட்டடத்தில் வேலை செய்து வரும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 25 துப்பரவு பணியாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் சார்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு, தீபாவளி உணவுக் கூடைகளை வழங்கி சிறப்பித்தார்.
வரும் தீபாவளித் திருநாளை இந்திய சமூகத்தினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வேளையில் இந்த மகிழ்ச்சியில் சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகக் கட்டடத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களும் திளைத்திருக்கும் நோக்கில் அன்பளிப்புக் கூடைகள் வழங்கப்பட்டதாக பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.

25 தொழிலாளர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய அன்பளிப்புக் கூடைகளுடன் ரொக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இந்த தீபாவளி அன்பளிப்புத் திட்டமானது, குறைந்த வருமானம் பெறுகின்ற குறிப்பாக மாநில அரசாங்கக் கட்டத்தைச் சுத்தம் செய்தல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் முதலிய பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள குத்தகை நிறுவனத்தின் பணியாளர்களுக்கு உதவும் மாநில அரசின் சமூகக் கடப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.








