கூலிம், ஆகஸ்ட்.07-
இந்தோனேசியாவில் நடைபெற்ற வோல்ட் ரோபோடிக்ஸ் & கம்பியூட்டர் சயின்ஸ் ஒலிம்பியாட் 2025 எனும் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கூலிம் பாயா பெசார் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இளமாறன் முனியான்டி மற்றும் தீர்சன்னா முனியான்டி ஆகிய இரு மாணவர்கள் மலேசியாவிற்குத் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவிலிருந்து கெடா சிலாங்கூர் , பஹாங், சபா மற்றும் ஜொகூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்வுச் செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுத்தனர்.
அதில் கெடா மாநில அளவில் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மட்டுமே பங்கெடுத்தாக மாணவன் இளமாறன் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற இப்புத்தாக்கப் போட்டியில் "குளோரின் ஃபிரீ டாப் ஓஃப் வாட்டர்" எனும் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியைச் செய்து அதில் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற முடிந்ததாக இளமாறன் மற்றும் தீர்சன்னா கூறினர்.
நம் உபயோகிக்கும் தண்ணீரியிலுள்ள குளோரின் எனும் இராசயனத்தை தினமும் சமையலுக்கு உபயோகிக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தி வெளியேற்றம் செய்யும் வழிமுறைகளை புத்தாக்கப் போட்டியில் ஒப்புவிக்கப்பட்டது. அவ்வழிமுறைகளுக்கு கிடைத்த வெற்றியே இந்தத் தங்கப் பதக்கம் என்று இளமாறன் விவரித்தார்.
இப்புத்தாக்கப் போட்டியில் 11 உலக நாடுகளுடன் மலேசியாவிலிருந்து 179 மாணவர்களும் கலந்து கொண்டனர் . உலக நாடுகளுக்கு இடையில் மலேசியாவிலிருந்து கூலிம் பாயா பெசார் கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.