சித்தியவான், டிசம்பர்.27-
சாதனைப் சுடர்மாமணி Master Ugaantarun Sugumar- ரின் ஒருங்கிணைப்பில், ‘ஷைனிங் ஸ்டார்ஸ்’ (Shining Starz) குழுவினரின் ஏற்பாட்டில் ‘கலாச்சாரத் திருவிழா வித் ஸ்டார்ஸ் 2.0’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இதன் முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, கலாச்சாரம், திறன் மற்றும் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் இது இரண்டாம் ஆண்டு விழாவாக முன்னெடுக்கப்பட்டது.

பேராக், சித்தியவான், சுங்கை வாங்கி தோட்டத்திலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை இவ்விழா பெருமையுடன் படைக்கப்பட்டது. இதில் பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முக்கிய அங்கமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5 பிரிவுகளாக வண்ணம் தீட்டும் போட்டி, பாடல் திறன் போட்டி, நடனப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிறப்பு விளையாட்டுகள், பாரம்பரிய உடை அலங்கார அணிவகுப்பு, பக்தி மயமான உடை அலங்கார அணிவகுப்பு என இப்போட்டிகள் நடைபெற்றன.

இந்த ஒட்டு மொத்தப் போட்டிகளின் பெரும் வெற்றியாளராக அர்வின் பார்த்திபன் வாகை சூடினார். மேலும், ‘ஷைனிங் ஸ்டார்ஸ்’ அமைப்பின் சிறப்பு விருதுகள், சாதனைகளைப் பாராட்டும் வகையில் ஆண்கள் பிரிவில் எம். அன்புஅரசன் மற்றும் பெண்கள் பிரிவில் சி. பிரியதர்சினி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். MIPP பேராக் மாநிலத் தலைவரும், உச்சமன்ற உறுப்பினருமான டத்தோ Ir. B. சத்திய பாலா, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைவரும், MIPP பேராக் மாநிலப் பொருளாளருமான சுபா கதிரவன், Punnimas Event Management- டை சேர்ந்த டத்தோ டாக்டர் புவனேஸ்வரன், ஈப்போ, கிளேபாங் ஸ்ரீகுரு சீரடி நாதர் சீடர்கள் இயக்கத்தைச் சேர்ந்த நவிநாதன் மற்றும் திருமதி சாய் தங்கம், பாசீர் பஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி ரொஸ்லி பின் அப்துல் ரஹ்மான், NCC டாஸ் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டு நிகழ்விற்குச் சிறப்பு சேர்த்தனர்.
குழுப்பணியின் பெரும் முயற்சியுடனும், சமூக ஆதரவுடனும் வெற்றிகரமாக நிறைவடைந்த இவ்விழா, பல இனிய நினைவுகளை உருவாக்கியுள்ளது. கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை வளர்ப்பதில் ‘ஷைனிங் ஸ்டார்ஸ்’ குழுவினர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தப் போவதாக அக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.








