பூச்சோங், நவம்பர்.08-
பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 150 பேருக்கு அத்தியாவசியப் பொருட்களை பேரங்காடியில் வாங்கிக் கொள்வதற்கான 100 ரிங்கிட் பெறுமானமுள்ள வவுச்சர்கள் இன்று வழங்கப்பட்டது.

B40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி இந்த வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக பூச்சோங் எம்.பி. யியோ பி யின் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை மாலையில் பூச்சோங், 14 ஆவது மைல், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் யியோ பி யின் வவுச்சர்களை வழங்கினார்.

பூச்சோங் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் தங்களைப் பதிவு செய்து கொண்ட உண்மையிலேயே உதவித் தேவைப்படக்கூடிய ஏழ்மை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோவில் நிர்வாகத்தினால் அடையாளம் காணப்பட்டு, வழங்கப்பட்ட பரிந்துரைக்கு ஏற்ப இந்த வவுச்சர்கள், நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும் வழங்கப்பட்டதாக யியோ பி யின் தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தில் சொந்த நிலப்பட்டாவைக் கொண்டுள்ள கோவில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக ஒரு முறை வழங்கக்கூடிய தலா 50 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் 10 கோவில்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதையும் யியோ பி யின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








