கோலாலம்பூர், அக்டோபர்.13-
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேருக்கு தாபுங் காசே ஹவானா நிதியகத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது.

நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின், விஸ்மா பெர்னாமாவில் இன்று திங்கட்கிழமை தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தலைமையில் தாபுங் காசே ஹவானா நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் ஊடகங்களில் பணிபுரியும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவச் சோதனை மற்றும் அவர்களின் குடும்பச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதி உதவியை தாபுங் காசே ஹவானா சார்பில் துணை அமைச்சர் திய் வழங்கினார்.

மடானி அரசாங்கத்தின் மையக் கருப்பொருளான ‘சினாரி ஹராப்பான், உத்துக்கான் பெர்பாடுவான்’ உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிதி உதவியை பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வாய்யுடன் இணைந்து துணை அமைச்சர் தியோ வழங்கினார்.

16 பேருக்கும் ரொக்க நிதி உதவியும், தீபாவளி ஹெம்பர்களும் வழங்கப்பட்டன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசிய ஊடகவியலாளர் தினமான ஹவானா உதயமான போது, ஊடகத்துறையில் நலிவுற்ற பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தாபுங் காசே ஹவானா தோற்றுவிக்கப்பட்டது. இதுவரையில் நாடு முழுவதும் உள்ள 532 ஊடகவியலாளர்கள் இந்த நிதியகத்தின் வாயிலாகப் பலன் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் தொடர்புத்துறை அமைச்சின் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்திரன், பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுகா நூருல் அஃபிடா கமாலுடின், பெர்னாமா தலைமை ஆசிரியரும், 2025 ஆம் ஆண்டுக்கான ஹவானா திட்டத்தின் இயக்குநருமான அருள்ராஜு துரை ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.