கோலாலம்பூர், செப்டம்பர்.01-
தியுடிஎம் எனப்படும் மலேசிய ஆகாயப் படையுடன் ஒன்றித்தவர் ரஞ்சிட் சிங் கில். வயது 78 ஆகிறது. ஒரு சீக்கியரான ரஞ்சிட் சிங், தியுடிஎம்மில் 36 ஆண்டுகள் பணியாற்றியவர்.
சீக்கியச் சமூகம் நாட்டின் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நீண்ட நெடிய வரலாறு உண்டு. இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சீக்கியச் சமூகத்தின் எண்ணிக்கை உள்ளது.
ஜஸ்வான் சிங் என்பவர், தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் ஹெலிகாப்டர் ஓட்டுநர் ஆவார். அதன் பிறகு தியுடிஎம்மில் பெயர் சொல்லத்தக்கவர் ரஞ்சிட் சிங். மூவாயிரத்து 500 மணி நேரம் ஹெலிகாப்டரைச் செலுத்தி, பரந்த அனுபவத்தைக் கொண்டவர்.
கோலாலம்பூரைத் தளமாகக் கொண்ட ரஞ்சிட் சிங், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்றும் குடும்பம் விரும்பினாலும் அதற்கான பொருளாதார வசதியில்லை. பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து பல முறை விண்ணப்பித்து கடைசியில் தியுடிஎம் வேலை வாய்ப்பு கிடைத்தது.
கோலாலம்பூரிலிருந்து அடிக்கடி சபா, சரவாவிற்கு ஹெலிகாப்டரைச் செலுத்தியாக வேண்டும். 1968 இல் தியுடிஎம்மில் இணைந்த தமக்கு, பேரா, கெரிக்கில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளைத் துடைத்தொழிப்பதில் பெரும் பங்களிப்பு உள்ளதாக 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ரஞ்சிட் சிங் , மெர்டேக்கா செய்தியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தியுடிஎம்மில் உயரிய பதவியான பிரிகேடியர் ஜெனரல் அந்தஸ்தைப் பெற்ற முதல் சீக்கியர் ரஞ்சிட் சிங் ஆவார்.